உ.பி.: விருப்பத்திற்கு மாறாக திருமணம்; மகளை சுட்டு கொன்று, சூட்கேசில் வைத்து வீசி சென்ற பெற்றோர்
உத்தர பிரதேசத்தில் கீழ்படியாத, பிடிவாதம் பிடித்து வேறு சாதி நபரை திருமணம் செய்த மகளை சுட்டு கொன்று, சூட்கேசில் வைத்து பெற்றோர் வீசிய அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்து உள்ளது.
மதுரா,
உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில் ஒதுக்குப்புற பகுதியில் கடந்த 18-ந்தேதி சூட்கேஸ் ஒன்று தனியாக கிடந்து உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அதனை கைப்பற்றினர்.
அந்த சூட்கேசுக்குள் 25 வயது இளம்பெண்ணின் உடல் இருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி நடந்த விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து உள்ளன.
இதன்படி, உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் நகரில் பலூனி பகுதியில் வசித்து வந்தவர் நித்தேஷ் யாதவ். இவரது மகள் ஆயுஷி சவுத்ரி. நித்தேசுக்கு வேலை கிடைத்ததும் தலைநகர் டெல்லிக்கு அவரது குடும்பம் புலம்பெயர்ந்து சென்றுள்ளது.
தெற்கு டெல்லியின் பாதர்பூர் பகுதியில் குடும்பத்துடன் நித்தேஷ் வசித்து வந்துள்ளார். டெல்லியில் ஆயுஷி சவுத்ரி கணினி பிரிவில் பட்டப்படிப்பு (பி.சி.ஏ.) படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அந்த இளம்பெண்ணின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. பெற்றோரிடம் எதுவும் கூறாமல் வெளியே சென்று சில நாட்கள் வரை தனது மகள் தங்கியிருந்தது நித்தேசுக்கு ஆத்திரம் ஏற்படுத்தி உள்ளது.
இதுதவிர, சத்ரபால் என்ற வேறு சாதி நபரை திருமணம் செய்ததுடன், இரவு வரை வெளியே தங்கியதும் நித்தேசுக்கு கூடுதலாக கோபமூட்டியுள்ளது. கீழ்படியாமை மற்றும் பிடிவாத நோக்குடன் தங்களது மகள் நடந்து கொண்டதில் அவரது பெற்றோர் ஆத்திரமடைந்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து, நித்தேஷ் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் மகளை சுட்டு விட்டு, உடலை சூட்கேசில் வைத்து மதுரா நகரில் வீசி விட்டு சென்றுள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சூட்கேசை பறிமுதல் செய்த பின்பு, செல்போனை ஆராய்ந்தும், சி.சி.டி.வி. காட்சிகள், சமூக ஊடகங்களை பயன்படுத்தியும், டெல்லியில் போஸ்டர்களை ஒட்டியும் அவரை அடையாளம் காண போலீசார் முயற்சித்து உள்ளனர்.
இதன்பின் ஆயுஷியின் சகோதரர் மற்றும் தாயார் அவரை அடையாளம் கண்டுள்ளனர். ஆயுஷியின் முகம் மற்றும் தலையில் ரத்தம் தோய்ந்து இருந்தது. உடல் முழுவதும் காயங்கள் தென்பட்டு உள்ளன. இந்த நிலையில், உடலை அடையாளம் காட்ட வந்த நித்தேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் நித்தேஷ் தனது மகளை துப்பாக்கியால் சுட்டு கொன்றதும், உடலை அப்புறப்படுத்த அவரது மனைவி உதவி செய்ததும் தெரிய வந்து உள்ளது. தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.