நில ஆக்கிரமிப்பு செய்ததாக மக்களுக்கு நோட்டீஸ்: கலெக்டர் அலுவலகத்தில் மந்திரி போராட்டம் - உத்தரபிரதேசத்தில் பரபரப்பு
உத்தரபிரதேசத்தில் நில ஆக்கிரமிப்பு செய்ததாக மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதால், கலெக்டர் அலுவலகத்தில் மந்திரி போராட்டம் நடத்தினார்.
சீதாப்பூர்,
உத்தரபிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பிப்ரகோரி கிராமத்தை சேர்ந்த சிலர் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருப்பதாக துணை கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இவ்வாறு சுமார் 170 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து கேட்பதற்காக ஹர்கான் தொகுதி எம்.எல்.ஏ.வும், சிறைத்துறை மந்திரியுமான சுரேஷ் ராகி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் அங்கு அவர் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.
அந்த கிராம மக்கள் வெளிமாநிலங்களில் வேலைக்கு சென்றிருப்பதாகவும், அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர், எந்த விசாரணையும் இல்லாமல் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதைத்தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய கலெக்டர் அனுஜ் சிங், இந்த விவகாரத்தை விசாரிப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில் முற்றுகை போராட்டத்தை மந்திரி கைவிட்டார்.இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் ½ மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.