உ.பி.: பிரபல யூ டியூபர் பிறந்த நாள் கொண்டாட்ட சர்ச்சையில் கைது; ஜாமீனில் விடுவிப்பு


உ.பி.:  பிரபல யூ டியூபர் பிறந்த நாள் கொண்டாட்ட சர்ச்சையில் கைது; ஜாமீனில் விடுவிப்பு
x

உத்தர பிரதேசத்தில் பிறந்த நாள் கொண்டாட்ட சர்ச்சையில் கைது செய்யப்பட்ட பிரபல யூ டியூபர் கவுரவ் தனேஜா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.



நொய்டா,



யூ டியூப் வழியே லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள பிரபல நபர் கவுரவ் தனேஜா. ஐ.ஐ.டி. காரக்பூரில் சிவில் என்ஜினியரிங் படித்துள்ள தனேஜா, தனது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் மெட்ரோ ரெயிலில் ஒரு பெட்டியை தனேஜா தனது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக முன்பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து, அவரது மனைவி ரித்து ரதீ தனேஜா, பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும்படி, ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.

உத்தர பிரதேச மெட்ரோ ரெயில் நிலையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெறும் எனவும், இதில், தனேஜாவின் ரசிகர்களும் கலந்து கொள்வார்கள் எனவும் ரதீ தனேஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மெட்ரோ ரெயில் நிலையத்தின் பிரிவு 51ல் குவிந்து விட்டனர். இதனால், கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தள்ளி கொண்டு முன்னே செல்லும் நிலை ஏற்பட்டது.

ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கும் இதனால் இடையூறு ஏற்பட்டது. குவிந்திருந்த ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் மெட்ரோ ரெயில்வே நிர்வாகனத்தினரும் திணறி போனார்கள். மெட்ரோ ரெயில் நிலையத்தின் கீழ் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் சாலையில் தேங்கி நின்ற வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அதிக நெருக்கடி ஏற்பட்ட சூழலில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக உடனடியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பின்னர், தடையுத்தரவை மீறி செயல்பட்டதற்காக தனேஜாவை போலீசார் காவலுக்கு கொண்டு சென்றனர். இரண்டு மணிநேரம் போலீசாரின் காவலில் இருந்த அவர் பின்னர் கைது செய்யப்பட்டார்.

இதன்பின் அடுத்த சில மணிநேரங்களில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளார். கவுரவ் தனேஜா பறக்கும் மிருகம் எனவும் அழைக்கப்படுகிறார். அவர், 3 வகையான யூ டியூப் சேனல்களை நடத்தி வருவதுடன், அதில் உடலை கட்டுக்கோப்புடன் வைத்து கொள்வது பற்றிய வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதற்காக லட்சக்கணக்கானோர் அவரை யூ டியூப் சேனலில் பின்தொடர்கின்றனர்.


Next Story