உ.பி.: கள்ளக்காதலருடன் சேர்ந்து மகன், மகள் கொடூர கொலை; தாய், 2 பெண்கள் உள்பட 6 பேர் கைது


உ.பி.: கள்ளக்காதலருடன் சேர்ந்து மகன், மகள் கொடூர கொலை; தாய், 2 பெண்கள் உள்பட 6 பேர் கைது
x

உத்தர பிரதேசத்தில் கள்ளக்காதலருடன் சேர்ந்து தனது மகன் மற்றும் மகளை கட்டி வைத்து கொடூர கொலை செய்த வழக்கில் தொடர்புடைய தாய், 2 பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.



மீரட்,


உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் இரு நாட்களுக்கு முன்பு 10 வயது சிறுவன் மற்றும் 6 வயது சிறுமி கொடூர கொலை செய்யப்பட்டு, அருகே உள்ள கால்வாயில் வீசப்பட்டு உள்ளனர்.

சிறுவர்கள் காணாமல் போனதுபற்றி தகவல் அறிந்து மீரட் நகர போலீசார் அதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து உள்ளன. ஷாகீத் பெய்க் என்பவர் அளித்த புகாரின் பேரில் அவரது மகன் மற்றும் மகளை போலீசார் தேடி வந்தனர்.

இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட சிறுவர், சிறுமிகளின் தாய், தனது கள்ளக்காதலருடன் சேர்ந்து தனது மகன் மற்றும் மகளை கொன்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்து உள்ளது. அவரது கள்ளக்காதலர் சவுத் பைசி என்பவர் கவுன்சிலராகவும் இருந்து வருகிறார்.

அவருடன் சேர்ந்து திட்டமிட்டு, குழந்தைகளை அவரது தாய் படுகொலை செய்து உள்ளார். இதற்கு பக்கத்து வீட்டுக்காரர்களும் துணையாக இருந்து உள்ளனர்.

இதுபற்றி மீரட் நகர போலீஸ் சூப்பிரெண்டு பியூஷ் சிங் கூறும்போது, இதன்படி, முதலில் சிறுமியை அவரது வீட்டில் வைத்து கொலை செய்து உள்ளனர். இதன்பின்னர், சிறுமியின் மூத்த சகோதரரான 10 வயது சிறுவனை பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டில் வைத்து கொலை செய்து உள்ளனர்.

அதன்பின் அவர்கள் இருவரின் உடல் கால்வாயில் வீசப்பட்டு உள்ளது. அவர்களது உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை. இந்த வழக்கில் தாய், 2 பெண்கள் உள்பட அனைத்து 6 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார். தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.


Next Story