உ.பி.: மகாகவி பிறந்த தினத்தில் உறவினரை சந்தித்து ஆசி பெற்ற மத்திய மந்திரி


உ.பி.: மகாகவி பிறந்த தினத்தில் உறவினரை சந்தித்து ஆசி பெற்ற மத்திய மந்திரி
x

உத்தர பிரதேசத்தில், மகாகவி பிறந்த தினத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து, அவரது உறவினரை சந்தித்து மத்திய மந்திரி ஜெய்சங்கர் ஆசி பெற்றுள்ளார்.



வாரணாசி,


இந்திய விடுதலைக்காக தமிழகத்தில் பல பாடல்களை எழுதி, மக்களிடம் சுதந்திர வேட்கையை தூண்டிய மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

சமூக சீர்திருத்தவாதி மற்றும் சுதந்திர போராட்ட வீரரான அவரது பிறந்த நாளை முன்னிட்டு உத்தர பிரதேசத்தின் காசியில் உள்ள அவரது உருவ சிலைக்கு மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன்பின்பு, வாரணாசியில் உள்ள மகாகவியின் மருமகன் உறவுமுறை கொண்ட கே.வி. கிருஷ்ணன் வீட்டுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் சென்றார். அவருக்கு பொன்னாடை போர்த்தி ஆசி பெற்றார்.

இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் சிறிது நேரம் பேசினார். மத்திய மந்திரி வருகையை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருந்தது.

இதுபற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த தினத்தில் காசியில் உள்ள அவரது குடும்பத்தினரை சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

அவரது மருமகன் உறவுமுறையான திரு. கே.வி. கிருஷ்ணன் அவர்களிடம் இருந்து ஆசிகள் பெற்றேன். அது ஊக்கம் அளிக்கும் வகையில் இருந்தது என பணிவாக தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டு உள்ளார்.


Next Story