கேரளாவில் அதிகன மழை எச்சரிக்கை: மக்கள் பாதுகாப்பாக இருக்க முதல்-மந்திரி அறிவுறுத்தல்
கேரளாவில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்திருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவுறுத்தி உள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதல் 2 வாரங்களுக்கு லேசான மழை பெய்து வந்தது. அதன் பிறகு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
மாநிலத்தின் மலையோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரள மாநிலத்தில் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது.
இந்நிலையில் கனமழையால் கோட்டயம் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் பஸ்சை முந்தி செல்ல முயன்ற கார் ஒன்று, நிரம்பி வழிந்த கால்வாயில் பாய்ந்ததில் அதில் இருந்த 3 பேர் பலியானார்கள்.
முன்னதாக, கொல்லம் மாவட்டம் கும்பவுருட்டி அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தமிழகத்தை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் காயத்துடன் உயிர் தப்பினார்.
இந்நிலையில் கேரளாவில் வருகிற 5-ந் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு சிவப்பு (அதிகன மழை) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களிலும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
பல இடங்களில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 5-ந் தேதி வரை தொடர் கன மழை பெய்யும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அந்த மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவுறுத்தி இருக்கிறார்.
மழையால் ஏற்படும் பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கேரள தீயணைப்புத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் இறங்கி உள்ளனர்.