கர்நாடக கடலோர, மலைநாடு பகுதியில் சாட்டிலைட் போன் பயன்படுத்திய மர்ம நபர்களால் பதற்றம்-தீவிர விசாரணை
தட்சிண கன்னடா மற்றும் வட கர்நாடக வனப்பகுதியில் சாட்டிலைட் போன் பயன்படுத்திய மர்ம நபர்களால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்களூரு: தட்சிண கன்னடா மற்றும் வட கர்நாடக வனப்பகுதியில் சாட்டிலைட் போன் பயன்படுத்திய மர்ம நபர்களால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாட்டிலைட் போன் சிக்னல்
தட்சிண கன்னடா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஹிஜாப், ஹலால், மசூதிகளில் சிவன் சிலை கண்டுபிடிப்பு என்று பல்வேறு சர்ச்சைக்குரிய பிரசனைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் தட்சிண கன்னடா வனப்பகுதியில் சாட்டிலைட் போன் வைத்து சிலர் பேசியிருப்பது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இந்த சாட்டிலைட்போன் சிக்னல் கடந்த மாதம் (மே) 23-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை பேசப்பட்டிருப்பதாக பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை வைத்து அவர்கள் விசாரித்தபோது, தட்சிண கன்னடாவில் 2 பகுதிகளில், வட கர்நாடகாவில் 2 பகுதிகளில், சிக்கமகளூருவில் ஒரு பகுதியில் இந்த சாட்டிலைட் போன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
5 இடங்களில் பதிவு
அதன்படி தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மங்களூரு கடலோர பகுதிலும், வட கர்நாடக மாவட்டம் எல்லாபுரா-ஷிரசிக்கு இடைப்பட்ட வனப்பகுதி மற்றும் சிக்கமகளூரு மாவட்டம் கடூர்-பீரூருக்கு இடைபட்ட வனப்பகுதியில் வைத்து மர்ம நபர்கள் இந்த சாட்டிலைட் போனை பயன்படுத்தியுள்ளனர். இந்த பகுதியில் செல்போன் சிக்னல் கிடைக்காது.
அதை தெரிந்தே மர்ம நபர்கள் சாட்டிலைட் போனை பயன்படுத்தியுள்ளனர். ஆனால் யார், எதற்காக பயன்படுத்தினர் என்பது தெரியவில்லை. ஆனால் மத மோதல் ஏற்படும் நேரத்தில் இந்த சாட்டிலைட் போன் சிக்னல் கிடைத்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.