உத்தர பிரதேசம்: யூ-டியூபில் வீடியோ பார்த்து தற்கொலை செய்து கொண்ட 11 வயது சிறுவன்
உயிரை மாய்த்துக் கொள்வது தொடர்பான வீடியோவை சிறுவன் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் சுமேர்பூர் பகுதியைச் சேர்ந்த நிகில் சாகு(வயது 11), அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை, வீட்டில் தனியாக இருந்த நிகில் சாகு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவன் நிகில் சாகு வீட்டில் தனியாக இருந்தபோது, யூ-டியூப் வலைதளத்தில் உயிரை மாய்த்துக் கொள்வது தொடர்பான வீடியோவை பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வீடியோவை பார்த்த பிறகு சிறுவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.