இந்தியாவில் எத்தனை பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு? - மத்திய மந்திரி மாண்டவியா தகவல்


இந்தியாவில் எத்தனை பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு? - மத்திய மந்திரி மாண்டவியா தகவல்
x

இந்தியாவில் எத்தனை பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உள்ளது என்ற கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா பதில் அளித்தார்.

புதுடெல்லி,

ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத்தொடர்ந்து ஆசிய நாடுகளிலும் குரங்கு அம்மை பரவி வருகிறது. இந்தியாவில் இந்த நோய் எத்தனை பேருக்கு பாதித்து இருக்கிறது என்ற கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று பதில் அளித்தார். அப்போது அவர் வெளியிட்ட தகவல்கள்:-

* இந்தியாவில் இதுவரை 8 பேருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது. அவர்களில் 5 பேர் வெளிநாடு சென்று வந்தவர்கள்.

* குரங்கு அம்மை நோய் கண்டறிதல் மற்றும் தடுப்பூசியின் வளர்ச்சி பற்றி கண்காணிக்க தேசிய பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

* இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) குரங்கு அம்மை வைரசை வெற்றிகரமாக தனிமைப்படுத்தி உள்ளது. இந்தியாவில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி நிறுவனங்கள், தடுப்பூசி, பரிசோதனை கருவிகள் உற்பத்தி நிறுவனங்கள், நாட்டில் தடுப்பூசியை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிக்காக வைரஸ் திரிபுகளை எடுக்க ஆர்வம் வெளிப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

* வெளிநாடுகளில் இருந்து இங்குள்ள விமான நிலையங்களில் வந்திறங்குகிறவர்களை தீவிரமாக கண்காணிக்கவும், கடுமையான சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளவும் விமான நிலைய, துறைமுக அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

* குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள மாவட்டங்களில் பரவலை கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு உதவ மத்திய குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

முதல் பலி

இதற்கிடையே ஐக்கிய அரபு அமீரத்தில் இருந்து, கேரளா வந்துள்ள 30 வயது ஆணுக்கு குரங்கு அம்மை பாதித்து, அவர் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த மாநில சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மேலும் கேரள மாநிலத்தில் கடந்த 30-ந் தேதி குரங்கு அம்மை பாதிப்புக்குள்ளாகி இருந்த 22 வயது ஆண் ஒருவர் மரணம் அடைந்தார். அவர் இந்தியாவில் குரங்கு அம்மைக்கு முதல் களப்பலி ஆவார்.

டெல்லியில் குரங்கு அம்மை பாதிப்புக்குள்ளான முதல் நபரான மேற்கு டெல்லி பகுதியை சேர்ந்த 34 வயது ஆண் குணம் அடைந்து, நேற்று முன்தினம் ஆஸ்பத்தியில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story