விபத்தில் சிக்குவதை தவிர்க்க 'வந்தே பாரத்' ரெயில் வழித்தடத்தில் தடுப்பு வேலி


விபத்தில் சிக்குவதை தவிர்க்க வந்தே பாரத் ரெயில் வழித்தடத்தில் தடுப்பு வேலி
x

வந்தே பாரத் ரெயில் விலங்குகள் மீது மோதி விபத்தில் சிக்குவதை தடுக்க மும்பை - ஆமதாபாத் இடையே தண்டவாளத்தையொட்டி ரூ.264 கோடி செலவில் தடுப்பு வேலி போடப்பட உள்ளது.

மும்பை,

மும்பை - காந்திநகர் இடையே கடந்த செப்டம்பர் 30-ந் தேதி அதிவேக வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. பிரதமர் மோடி ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். சேவை தொடங்கியது முதல் வந்தே பாரத் ரெயில் மாடுகள் மீதும் மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. மேலும் மாட்டின் மீது மோதி வந்தே பாரத் ரெயிலின் முன்பகுதி சேதமடைந்தது. இது ரெயிலின் தரத்தை கேள்வி எழுப்பின.கடந்த வியாழக்கிழமை கூட 4-வது முறையாக குஜராத் மாநிலம் உத்வாடா - வாபி இடையே மாடு மீது மோதி வந்தே ரெயில் விபத்தில் சிக்கியது.

இந்தநிலையில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மும்பை - ஆமதாபாத் இடையே தண்டவாளத்தையொட்டி ரூ.264 கோடி செலவில் தடுப்பு வேலி அமைக்க மேற்கு ரெயில்வே திட்டமிட்டு உள்ளது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் மேற்கு ரெயில்வே பொது மேலாளர் அசோக் மிஸ்ரா கூறுகையில், " மும்பை - ஆமதாபாத் இடையே 620 கி.மீ. தடுப்பு வேலி அமைக்க ரூ.264 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது" என்றார்.இந்த தடுப்பு வேலி மனிதர்கள் கடந்து செல்லும் வகையில், கால்நடைகள் கடந்து செல்ல முடியாத வகையிலும் 'டயிள்யூ - பீம்' வடிவில் அமைக்கப்பட உள்ளது. தரையில் இருந்து 1½ மீட்டர் உயரத்துக்கு இந்த வேலி இருக்கும் எனவும் அசோக் மிஸ்ரா கூறினார்.


Next Story