கர்நாடக சட்டசபை தேர்தலில் வருணா தொகுதியில் போட்டியா?
கர்நாடக சட்டசபை தேர்தலில் வருணா தொகுதியில் போட்டியா என்பது குறித்து எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா பதில் அளித்துள்ளார்.
மைசூரு:-
வருணாவில் போட்டியா?
மைசூரு சங்கர மடத்தில் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் கர்நாடக மாநில பா.ஜனதா துணை தலைவரும், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகனுமான விஜயேந்திரா கலந்துகொண்டார். இந்த கூட்டம் முடிந்த பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி மாநிலத்தில் பா.ஜனதாவை பலப்படுத்தும் பொறுப்பை கட்சி மேலிடம் எனக்கு அளித்துள்ளது. அந்த பணியை சிறப்பாக செய்து வருகிறேன். சட்டசபை தேர்தலில் வருணா அல்லது சிகாரிப்புரா தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். கட்சி மேலிடம் எந்த தொகுதியில் போட்டியிட கூறுகிறதோ அந்த தொகுதியில் போட்டியிடுவோம்.
சித்தராமையாவை எதிர்த்து...
வருணா தொகுதி மக்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த தொகுதியை நான் மறக்க மாட்டேன். எனக்கு அரசியல் வாழ்வு கொடுத்ததே வருணா தொகுதி தான். வருணாவில் சித்தராமையா போட்டியிட்டால் அவரை எதிர்த்து நிற்பேனா என்று கேட்கிறீர்கள். கட்சி மேலிடம் கூறினால் நிச்சயம் சித்தராமையாவை எதிர்த்து போட்டியிடுவேன்.
குஜராத் மாநிலத்தை போல கர்நாடகத்திலும் பா.ஜனதா அமோக வெற்றி பெறும். பா.ஜனதாவை கர்நாடகத்தில் ஆட்சியில் அமர வைப்பதுதான் எங்கள் நோக்கம். குஜராத்தின் வெற்றி கர்நாடகத்திலும் எதிரொலிக்கும். பா.ஜனதாவை பலப்படுத்த மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.