வழி கேட்பதுபோல் வசியம்... தாலி, நகைகளை கழற்றி மர்ம நபர்களிடம் கொடுத்த பெண்; அதிர்ச்சி சம்பவம்
மத்திய பிரதேசத்தில் ஊருக்கு போக வழி கேட்பதுபோல், பெண்ணை வசியம் செய்து தாலி உள்பட நகைகளை மர்ம நபர்கள் மயக்கி, வாங்கி சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
இந்தூர்,
மத்திய பிரதேசத்தில் காந்தி நகர் பகுதியை சேர்ந்த பெண் லட்சுமிபாய். இவர், ஜவகர்மார்க் பகுதி வழியே பண்டரிநாத் பகுதி நோக்கி நடந்து சென்று உள்ளார்.
அப்போது அவரை 2 பேர் வழிமறித்து உள்ளனர். அவர்களில் ஒருவர் திவாஸ் நகருக்கு எப்படி செல்ல வேண்டும்? என வழி கேட்டு உள்ளார். அதற்கு அந்த பெண், ரெயில்வே நிலையத்திற்கு சென்று ரெயிலில் செல்லலாம்.
அல்லது படா கணபதி பகுதியில் பஸ்சை பிடித்தும் போகலாம் என கூறியுள்ளார். அந்த பெண்ணிடம் பேசி கொண்டிருக்கும்போது, அவரை இருவரும் வசியம் செய்து உள்ளனர் என கூறப்படுகிறது.
இதனால், அந்த பெண் அணிந்திருந்த தாலி மற்றும் காதணிகள் ஆகியவற்றை கழற்றி அவர்களிடம் கொடுத்து உள்ளார். அதன்பின்னர் அந்த நபர்கள் தப்பி சென்று விட்டனர்.
இதன்பின்னரே தனது நகைகள் காணாமல் போயுள்ளன என உணர்ந்து, குடும்பத்தினரிடம் கூறி, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சி.சி.டி.வி. காட்சி பதிவுகள் அடிப்படையில் 2 பேரையும் தேடி வருகிறோம் என போலீசார் கூறியுள்ளனர்.
இந்த வழக்கில் வழிகேட்ட நபர்கள் முதலில், டிக்கெட் எடுக்க போதிய பணம் இல்லை என கூறி, அந்த பெண்ணிடமே பணம் கேட்டு உள்ளனர். அவரும், ரூ.200 கொடுத்து உதவி உள்ளார்.
இதனால், அவர்களிருவரும் பேச்சு கொடுத்தபடி, அவரை வேறு இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். நகைகளையும் கேட்டு உள்ளனர். அப்போது, அந்த பெண் சுய நினைவுடனேயே இருந்து உள்ளார்.
ஆனால், அவர்கள் ஏன் நகைகளை கேட்டனர் என்றும், அவர்கள் கேட்டதும் நகைகளை ஏன் கொடுத்தேன் என்றும் தெரியவில்லை என அந்த பெண் கூறியுள்ளார்.