ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு - மாநில அரசு அறிவிப்பு


ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு - மாநில அரசு அறிவிப்பு
x

ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜெய்ப்பூர்,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்கிறபோதெல்லாம், அதற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை நிறுவனங்கள் உயர்த்துகிறபோது அது பொதுமக்களுக்கு பெரும் சுமையாகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத கடைசியில் ஒரே வாரத்தில்5 முறை பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது.

பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு விதிக்கிற உற்பத்தி வரியும், மாநில அரசுகள் விதிக்கும் உள்ளூர் வரிகளும் (மதிப்பு கூட்டு வரி) பெரும்பங்கு வகிக்கின்றன. எனவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

இந்த நிலையில், இந்த நிலையில் மத்திய அரசு நேற்று அதிரடியாக மீண்டும் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை கணிசமாக குறைத்தது. பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.8 மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.6 குறைக்கப்பட்டது.

இதனிடையே மாநில அரசுகளும் பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரியை குறைத்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து, முதல் மாநிலமாக கேரள அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை ரூ.2.41ம் மற்றும் டீசல் மீதான வாட் வரியை ரூ.1.36ம் குறைப்பதாக அறிவித்தது.

இந்நிலையில் ராஜஸ்தான் அரசு இன்று பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்து மாநில அரசு அறிவித்துள்ளது. அதன் படி ராஜஸ்தானில் பெட்ரோல் மீதான வரியில் 2.48 ரூபாயும், டீசல் மீதான வரியில் 1.16 ரூபாயும் குறைத்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10.48 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7.16 குறைந்துள்ளதாக ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கேரளா மற்றும் ராஜஸ்தான் அரசுகளை பின்பற்றி மேலும் பல மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story