கட்டிப்பிடித்துக் கொண்டே பைக் ஓட்டிய ஜோடி கைது
விசாகப்பட்டினத்தில், கட்டிப்பிடித்தபடி ஒரு ஜோடி பைக் ஓட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
விசாகப்பட்டினம்,
ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில், கட்டிப்பிடித்தபடி ஒரு ஜோடி பைக் ஓட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து அந்த ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓடும் பைக்கில் பெட்ரோல் டேங்கின் மீது அந்த பெண் அமர்ந்து பைக் ஓட்டும் நபரை கட்டிப்பிடித்தபடி செல்வது அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை அந்த வழியாக காரில் சென்ற நபர் ஒருவர் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்.
இந்த விவகாரம் விசாகப்பட்டினம் போலீசாரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், அஜய்குமார் (22), கே. ஷைலஜா (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவர் மீதும் அலட்சியமாக வாகனம் ஓட்டுதல், மோட்டார் வாகன சட்டம் 336, 279, 132 மற்றும் 129 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர். இருவரது பெற்றோரும் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
போக்குவரத்து விதிகளை குடிமக்கள் கடைபிடிப்பது மிகவும் அவசியம் என்று மாநகர காவல் ஆணையர் சி.எச்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது வாகனங்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.