ஓடும் ரயிலில் தொழுகையில் ஈடுபட்டதாக புதிய சர்ச்சை: விசாரணை நடப்பதாக உ.பி போலீஸ் தகவல்


ஓடும் ரயிலில் தொழுகையில் ஈடுபட்டதாக புதிய சர்ச்சை: விசாரணை நடப்பதாக உ.பி போலீஸ் தகவல்
x

உத்தரபிரதேசத்தில் ரெயிலில் தொழுகை செய்த வீடியோ காட்சிகள் வைரலானதையடுத்து பொது இடங்களில் தொழுகை நடத்துவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் ரெயிலில் 4 பேர் தொழுகை செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவியதையடுத்து பொது இடங்களில் தொழுகை நடத்துவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக மாநில போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

குஷிநகரின் முன்னாள் பாஜக எம்எல்ஏ தீப்லால் பாரதி பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், சத்தியாகிரக விரைவு ரயிலில் கட்டா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது, ஸ்லீப்பர் பெட்டியில் நடந்து செல்லும் இடைவெளியில் 4 முஸ்லீம் ஆண்கள் தொழுகை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தொழுகை செய்தவர்களுக்கு அருகில் இருந்த ஒருவர் பயணிகளை தொழுகை முடியும் வரை காத்திருக்கச் சொல்வது வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த வீடியோ வைரலானதையடுத்து பொது இடங்களில் தொழுகை செய்வது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அரியானாவில் தொழுகை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஒரு திறந்தவெளியில் போராட்டங்கள் வெடித்தன. அப்பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தியபோது, ​​இந்து வலதுசாரி குழுக்களின் ஆதரவாளர்கள் திரண்டு வந்து ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்து அங்கு கலவரம் ஏற்படாத வகையில் தடுத்தனர்.

கடந்த மாதம் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், மருத்துவமனையில் பெண் ஒருவர் தொழுகை செய்யும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் குடும்ப உறுப்பினர் குணமடைய பிரார்த்தனை செய்ததாகவும், எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும் போலீசார் அறிக்கை வெளியிட்டனர்.

ஜூலை மாதம், உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் புதிதாக திறக்கப்பட்ட லுலு மாலில் சிலர் தொழுகை செய்யும் வீடியோ வைரலானதை அடுத்து பலர் கைது செய்யப்பட்டனர். மாநிலத்தில் சூழலை சீர்குலைக்கும் கூறுகளுக்கு எதிராக கடுமையாக செயல்படுமாறு போலீசாருக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில், முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், நிர்வாகத்தின் முன் அனுமதியின்றி மாநிலத்தில் எந்த மத ஊர்வலத்தையும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஒலிபெருக்கிகள் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story