சிகாரிபுராவில் விஜயேந்திரா போட்டியிடுவது உறுதி
சிகாரிபுரா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிடுவது உறுதி என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.
சிவமொக்கா:-
சிகாரிபுரா தொகுதி
கர்நாடகத்தில் தேர்தலையொட்டி, காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது. ஆனால் பா.ஜனதா கட்சி இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்நிலையில் சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுரா தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா போட்டியிடுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் வருணா தொகுதியில், காங்கிரஸ் எதிர்கட்சி தலைவரான சித்தராமையா எதிர்த்து போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாவில்லை. இந்நிலையில் தனது மகன் வருணா தொகுதியில் போட்டியிடவில்லை. சிகாரிபுரா தொகுதியில்தான் போட்டியிடுவார் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
50 ஆயிரம் வாக்கு வித்தியாசம்...
இது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-
எனது மகன் வியஜேந்திரா எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற கேள்வி பலர் மத்தியில் எழும்பியுள்ளது. மேலும் வதந்திகள் பரவி வருகிறது. எனவே வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். விஜயேந்திராவிற்கு கட்சியை முன்னெடுத்து செல்லும் பக்குவம் வந்துவிட்டது. அவருக்கு சாதகமான தொகுதி சிகாரிபுராதான்.
அந்த தொகுதியில்தான் அவர் போட்டியிடுவார். வேறு எந்த தொகுதியிலும் போட்டியிடுவது இல்லை. கட்சி தலைமை மற்றும் தொண்டர்கள், அவரை வேறு சில தொகுதிகளில் போட்டியிடும் படி அழைப்பு விடுகிறார்கள். ஆனால் சிகாரிபுராவில் அவருக்கு ெசல்வாக்கு அதிகம் உள்ளது. 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவார். சிகாரிபுரா மக்களும் அவரை விரும்புகின்றனர். எனவே அங்குதான் விஜயேந்திரா போட்டியிடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.