5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம அலுவலக ஊழியர் கைது


5  ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம அலுவலக ஊழியர் கைது
x
தினத்தந்தி 18 May 2024 6:48 AM (Updated: 18 May 2024 6:51 AM)
t-max-icont-min-icon

குஜராத்தில் விவசாயிகளிடம் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம பஞ்சாயத்து கணினி ஆபரேட்டர் கைது செய்யப்பட்டுள்ளார்

அகமதாபாத்,

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ஜாம்நகரில் உள்ள மோர்கண்டா கிராமத்தில் பஞ்சாயத்து போர்டு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக பணியாற்றியவர் நவீன் சந்திரா நகும்(46). இவரிடம் அரசின் வருவாய் ஆவணங்களைக் கேட்டு விவசாயிகள் மனு செய்தனர். அவர்களிடம் ஆவணங்களை வழங்க நவீன் சந்திரா 5 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

விவசாயிகளிடம் ஒவ்வொரு ஆவணத்திற்கும் தலா 5 ரூபாய் லஞ்சமாக வழங்க வேண்டும் என்று நவீன் சந்திரா கேட்டுள்ளார். இதுதொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் செய்தனர். இதையடுத்து ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், நவீன் சந்திராவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இது குறித்து ராஜ்கோட் ஏசிபி உதவி இயக்குநர் கே.எச்.கோஹில் கூறுகையில், " மோர்கண்டாவில் வசிக்கும் நவீன் சந்திரா, கிராம பஞ்சாயத்து அலுவலக கணினி ஆபரேட்டராக தினமும் இரண்டு மணி நேரமே வேலை செய்துள்ளார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் வேலை செய்து வருகிறார். அரசு ஆவணங்கள் கேட்கும் விவசாயிகளிடம், ஒவ்வொரு ஆவணத்திற்கும் 5 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் எம்.டி.படேல் தலைமையிலான குழுவினர் நவீன் சந்திராவை கையும், களவுமாக கைது செய்துள்ளனர்" என்றார். 5 ரூபாய் லஞ்சம் பெற்றதாக அரசு ஊழியர் கைதாகியிருக்கும் செய்தி பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story