மழை வேண்டி சிறுவர்களுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்


மழை வேண்டி சிறுவர்களுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 1 Sept 2023 12:15 AM IST (Updated: 1 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தொட்டபள்ளாப்புரா:-

கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை பொய்த்துள்ளது. இதனால் மாநிலத்தில் 150-க்கும் மேற்பட்ட தாலுகாக்களில் வறட்சி நிலவுகிறது. மழைக்காக கழுதைகள், தவளைக்கு திருமணம் செய்து வைக்கும் சம்பவங்களும், கோவில்களில் பூஜைகள் நடத்துவதும் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவில் மழைக்காக வேண்டிய சிறுவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது தொட்டபள்ளாப்புரா தாலுகா பஜ்ஜாரல ஹள்ளி கிராமத்தில் மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது. இதையடுத்து, ஒரு சிறுவன் மாப்பிள்ளை போன்று அலங்காரம் செய்யப்பட்டு இருந்தான். மற்றொரு சிறுவன் மணப்பெண் போன்று அலங்காரம் செய்யப்பட்டு இருந்தான். மணமக்களுக்கு எப்படி திருமணம் நடைபெறுமோ அதுபோல் சிறுவர்களுக்கு கிராம மக்கள் திருமணம் நடத்தினர். சிறுவர்கள் மாலை மாற்றியதுடன் தாலி கட்டி கொண்டும் திருமணம் செய்து கொண்டார்கள். மேளம், தாளம் முழங்க இந்த திருமணம் நடந்தது. இதற்காக கிராம மக்கள் அனைவரும் திரண்டு வந்து மழை வேண்டி வருண பகவானை வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர். அதன்பிறகு, கிராம மக்கள் அனைவருக்கும் உணவு விருந்து பரிமாறப்பட்டது. மழை பெய்யாத காலங்களில் இதுபோன்று சிறுவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பது கிராமத்தில் இருக்கும் ஐதீகம் என்று கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.


Next Story