'மதத்தின் பெயரில் வன்முறைகள்'முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வேதனை
'மதத்தின் பெயரில் வன்முறைகள்' முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வேதனையுடன் தெரிவித்தார்.
சிக்கமகளூரு-
சிக்கமகளூருவில் ஜெகத்குரு ரேணுகாச்சார்யா ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-
வட இந்தியாவில் காசி புண்ணிய தலம் இருப்பது போல் தென்இந்தியாவில் ரம்பாபுரி இருப்பது நமது பாக்கியம். நமது கலாசாரம், பண்பாடு போன்றவை நமது வளமான எதிர்காலத்திற்கு அடித்தளம் ஆகும். மனசாட்சிப்படி உண்மையின் பாதையில் நடப்பவர்கள் தான் உண்மையான குருக்கள். சமுதாயத்தில் சாதி-மாத பேதங்களை போக்கி நல்லிணக்கத்தை ஏற்படுத்த இந்த மடம் பணியாற்றி வருகிறது.
எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது, இந்து மடங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், ஹஜ் பவன் போன்றவற்றுக்கு ரூ.40 கோடி நிதி வழங்கப்பட்டது. மதங்களால் தான் உலக அமைதி ஏற்படும் என்பதை அனைவரும் அறிய வேண்டும். இன்றைய சூழ்நிலையில் மதத்தின் பெயரில் வன்முறைகள் நடக்கின்றன. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரின் மனநிலையை மாற்ற வேண்டும். இந்த பணி மத தலைவர்களால் மட்டுமே செய்ய முடியும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.