திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தை மாற்ற தேவஸ்தானம் ஆலோசனை


திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தை மாற்ற தேவஸ்தானம் ஆலோசனை
x

திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தை மாற்ற தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது வி.ஐ.பி. பிரேக் தரிசனம் அதிகாலை 5 மணியில் இருந்து காலை 6 மணி வரையிலும், காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும் நடக்கிறது. வழக்கமாக நள்ளிரவு 12 மணிக்குமேல் அனைத்துத் தரிசனங்களும் நிறுத்தப்பட்டு ஏகாந்தசேவை நடக்கிறது.

பின்னர் மீண்டும் அதிகாலை 2.30 மணிக்கு சுப்ரபாத சேவையுடன் தரிசனம் தொடங்கும். வாராந்திர ஆர்ஜித சேவைகளுக்குப் பிறகு தோமால சேவை, அர்ச்சனை, வி.ஐ.பி. பிரேக் தரிசனம் தொடங்கும். இதையெல்லாம் முடிப்பதற்குள் காலை 10 மணி ஆகிறது. இதனால் நள்ளிரவுக்குமேல் வரிசையில் செல்லும் பக்தர்கள் காலை வரை இலவச தரிசனத்துக்காக வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள கம்பார்ட்மெண்டுகளில் காத்திருக்க வேண்டி உள்ளது.

அறங்காவலர் குழு கூட்டத்தில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. அதாவது, ஆர்ஜித சேவைகளின் நேரத்தை மாற்ற முடியாத சூழ்நிலையில் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தை காலை 10 மணிக்கு மாற்ற அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம் காலை 6 மணியில் இருந்து பொதுப் பக்தர்களுக்கு தரிசனம் வழங்குவதால் பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்க முடியும் என்பது திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கருத்து.

ஆனால், அதில் சில பிரச்சினைகள் எழுகின்றன. கோவிலில் கல்யாண உற்சவத்துக்கான டிக்கெட் வைத்திருக்கும் பக்தர்களும் காலை 10 மணிக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அந்த நேரத்தில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை அமல்படுத்துவதால், பிரச்சினை வருமா? என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மேலும் காலை 6 மணியில் இருந்து காலை 10 மணி வரை இலவச தரிசனம் நடக்கும்போது பக்தர்கள் கூட்டம் அலைமோதினால் பிரச்சினை இருக்காது. இரவு வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள கம்பார்ட்மெண்டுகளில் காத்திருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், வி.ஐ.பி. பிரேக் தரிசனம் தொடங்கும் வரை வரிசைகள் காலியாகவே இருக்கும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் இவை அனைத்தையும் ஆய்வு செய்யும் வகையில் நவம்பர் மாதம் 7, 8, 9-ந்தேதிகளில் காலை 10 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை 3 நாட்களுக்கு சோதனை ஓட்டம் அடிப்படையில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை அமல்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாகத் தெரிகிறது. அதில் உள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டு டிசம்பர் மாதம் முதல் புதிய முறை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும், எனத் தெரிகிறது.

டிசம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகளுக்கான ஒதுக்கீடும் ஆன்லைனில் வெளியிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் காலை 10 மணிக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் அமல்படுத்தப்பட்டால், வி.ஐ.பி. பிரேக் தரிசனம் செய்யும் பக்தர்கள் அறைகள் கேட்கும் பிரச்சினை குறையும், என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் கருதுகிறது.

வி.ஐ.பி. பக்தர்கள் திருப்பதியில் தங்கி திருமலைக்கு காலை 9 மணிக்கு சென்றால், காலை 10 மணிக்கு கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து முடிந்ததும், மதியத்துக்கு மேல் திருமலையில் இருந்து திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்று விடலாம். இதனால், பொதுப் பக்தர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது, என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story