நடுரோட்டில் பீட்சா டெலிவரி செய்யும் இளம்பெண்ணை 4 பெண்கள் அடித்து உதைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு!
ஒரு இளம் பெண்ணை, நடுத்தெருவில் வைத்து 4 பெண்கள் சேர்ந்து அவரை கீழே தள்ளிவிட்டு, காலால் மிதித்து கொடூரமாக அடித்து துன்புறுத்தினர்.
இந்தூர்,
டோமினோஸ் பீட்சா கடையில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர் ஒருவரை, 4 இளம்பெண்கள் சேர்ந்து பட்டப்பகலில் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீட்சா கடையில் பணிபுரிந்து வரும் ஒரு இளம் பெண்ணை, நடுத்தெருவில் வைத்து 4 பெண்கள் சேர்ந்து அவரை கீழே தள்ளிவிட்டு, காலால் மிதித்து கொடூரமாக அடித்து துன்புறுத்தினர்.
இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்துள்ளது. இந்த தாக்குதல் வீடியோ டுவிட்டரில் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு கடும் கண்டனம் கிளம்பியுள்ளது.
அந்த வீடியோவில், டோமினோஸ் பீட்சாவின் பெண் ஊழியர் ஒருவர் பொது இடத்தில் அடிக்கப்படுகிறார். அதன்பின், வலியால் அவர் அழுவதைக் காணலாம். ஆனால் யாரும் அவருக்கு உதவவில்லை. சுற்றி நின்று வேடிக்கை பார்க்கின்றனர்.
போலீசிடம் புகார் அளிப்பேன் என்று அந்த ஊழியர் கூறியுள்ளார். அதற்கு அந்த கும்பலில் இருந்த ஒரு பெண், 'போய் போலீசை கூப்பிட்டு, புகார் கொடு' என்று சொல்லிவிட்டு அவரை தொடர்ந்து தாக்கியுள்ளார்.
கடைசியில் அந்த பெண், அவர்களிடமிருந்து தப்பித்து அருகில் உள்ள வீட்டில் பதுங்கி தன்னை காப்பாற்றிக் கொண்டார்.அவரிடமிருந்து பெறப்பட்ட புகாரின் பேரில், நான்கு பெண்கள் மீதும் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
குற்றம் சாட்டப்பட்ட பெண்கள் நால்வரும், உள்ளூர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
பட்டப்பகலில் நடுரோட்டில் ஒரு இளம்பெண்ணை இப்படி இரக்கமில்லாமல், சில பெண்கள் தாக்கிய சம்பவம் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.