சத்தீஷ்காரின் புதிய முதல்-மந்திரியாக விஷ்ணு தியோ சாய் தேர்வு
அவர் 2020 முதல் 2022 ஆண்டு வரையில் அந்த கட்சியின் மாநில தலைவராக பதவி வகித்த அனுபவம் வாய்ந்தவர்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்காரில் கடந்த நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 3-ந்தேதி வெளியிடப்பட்டன. இதில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பா.ஜ.க. 54 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 35 இடங்களில் வென்றது. இதனால், பா.ஜ.க. ஆட்சியமைக்கும் பணியில் ஈடுபட்டது.
பெரும்பான்மைக்கு கூடுதலான தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க.வின் மத்திய கண்காணிப்பாளர்களான சர்பானந்தா சோனோவால் மற்றும் அர்ஜுன் முண்டா ஆகியோர் ராய்ப்பூரில் இன்று கூட்டம் ஒன்றை நடத்தினர்.
இந்த நிலையில், வடக்கு சத்தீஷ்காரில் குன்குரி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற விஷ்ணு தியோ சாய் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சத்தீஷ்காரின் புதிய முதல்-மந்திரியாக விஷ்ணு தியோ சாய் பதவியேற்க உள்ளார்.
பழங்குடியின தலைவர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரியான சாய் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர். அவர் 2020 முதல் 2022 ஆண்டு வரையில் அந்த கட்சியின் மாநில தலைவராக பதவி வகித்த அனுபவம் வாய்ந்தவர். பிரதமர் மோடியின் முதல் மந்திரிசபையில், சுரங்கம், ஸ்டீல் துறைக்கான மத்திய இணை மந்திரியாக அவர் பதவி வகித்திருக்கிறார்.