'பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், ரூ.13 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்படும்' - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்


பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், ரூ.13 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்படும் - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
x

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டத்தில், விஸ்வகர்மா திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி நேற்று முன்தினம் சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி உரையாற்றினார். அப்போது, கைவினை கலைஞர்களுக்காக 'விஸ்வகர்மா' என்ற புதிய திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில், நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில், விஸ்வகர்மா திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

"பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், ரூ.13 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தால், நெசவாளர்கள், பொற்கொல்லர்கள், கொல்லர்கள், சலவை தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள் என சுமார் 30 லட்சம் பாரம்பரிய கைவினை கலைஞர் குடும்பங்கள் பலன் அடையும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் இத்திட்டத்தில் பலன் அடையலாம்.

இதன்படி, கைவினை கலைஞர்களுக்கு முதல் தவணையாக ரூ.1 லட்சம் கடனும், 2-வது தவணையாக ரூ.2 லட்சம் கடனும் அளிக்கப்படும். 5 சதவீத வட்டியில் இந்த கடன் அளிக்கப்படும். மேலும், கைவினை கலைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியின்போது, நாள் ஒன்றுக்கு ரூ.500 உதவித்தொகை அளிக்கப்படும். விஸ்வகர்மா ஜெயந்தியான செப்டம்பர் 17-ந் தேதி இத்திட்டம் தொடங்கப்படும்."

இவ்வாறு அவர் கூறினார்.

அதே போல், நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத பசுமை போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக, 'பிரதமரின் இபஸ் சேவா' என்ற திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதன்படி, நாடு முழுவதும் 169 நகரங்களில் இருந்து 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு 10 ஆயிரம் மின்சார பஸ்கள் இயக்கப்படும். அமைப்புரீதியான பஸ் போக்குவரத்து இல்லாத நகரங்களில் மின்சார பஸ் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்துக்கான மொத்த செலவு ரூ.57 ஆயிரத்து 613 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதில், மத்திய அரசு தனது பங்காக ரூ.20 ஆயிரம் கோடி அளிக்கும்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை நீட்டிக்கவும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதற்கு ரூ.14 ஆயிரத்து 903 கோடி ஒதுக்கப்படும். இந்த திட்டத்தின்கீழ், 5 லட்சத்து 25 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு மறுதிறன் பயிற்சி அளிக்கப்படும். 2 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும். தேசிய சூப்பர்கம்ப்யூட்டிங் திட்டத்தின்கீழ், ஏற்கனவே 18 சூப்பர் கம்ப்யூட்டர்கள் உள்ள நிலையில், மேலும் 9 சூப்பர் கம்ப்யூட்டர்கள் சேர்க்கப்படும்.

இந்திய ரெயில்வேயின் ரூ.32 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான 7 திட்டங்களுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. சுமுகமான ரெயில் போக்குவரத்துக்கும், பயணத்தை எளிதாக்குவதற்கும், நெரிசலை குறைப்பதற்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உத்தரபிரதேசம், பீகார், தெலுங்கானா, ஆந்திரா, மராட்டியம், குஜராத், ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களில் 35 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் இந்திய ரெயில்வே நெட்வொர்க்கின் தூரம் மேலும் 2 ஆயிரம் கி.மீ. அதிகரிக்கும்.


Next Story