மணிப்பூருக்கு இன்று பயணம்: கள நிலவரத்தை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை வழங்குவோம் - எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக அறிவிப்பு


மணிப்பூருக்கு இன்று பயணம்: கள நிலவரத்தை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை வழங்குவோம் - எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக அறிவிப்பு
x
தினத்தந்தி 28 July 2023 11:15 PM GMT (Updated: 29 July 2023 4:55 AM GMT)

கலவரம் பாதித்த மணிப்பூரில் இன்று (சனிக்கிழமை) ஆய்வு செய்யும் எதிர்க்கட்சி தலைவர்கள், அங்குள்ள நிலவரம் குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்க இருப்பதாக தெரிவித்தனர்.

புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தி, குகி சமூகத்தினருக்கு இடையே கடந்த மே 3-ந் தேதி வெடித்த கலவரம் இன்னும் முழுமையாக ஓயவில்லை. 160-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இந்த வன்முறை சம்பவங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளன.

இந்த வன்முறையை தடுக்க தவறியதாக மத்திய-மாநில அரசுகளை எதிர்க்கட்சிகள் தீவிரமாக குற்றம் சாட்டி வருகின்றன. அத்துடன் இந்த பிரச்சினையை முன்வைத்து நாடாளுமன்றத்தையும் தொடர்ந்து முடக்கி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கலவர பூமியான மணிப்பூருக்கு நேரில் சென்று கள நிலவரத்தை ஆய்வு செய்ய எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

அதன்படி 'இந்தியா' கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று (சனிக்கிழமை) மணிப்பூர் செல்கின்றனர். இன்றும், நாளையும் மாநிலத்தில் கலவர பாதிப்புகளை அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.

இந்த குழுவில் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய் (காங்கிரஸ்), சுஷ்மிதா தேவ் (திரிணாமுல் காங்கிரஸ்), மகுவா மாஜி (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா), கனிமொழி (தி.மு.க.), வந்தனா சவான் (தேசியவாத காங்கிரஸ்), ஜெயந்த் சவுத்ரி (ராஷ்டிரீய லோக்தளம்), மனோஜ் குமார் ஜா (ராஷ்டிரீய ஜனதாதளம்), பிரேமச்சந்திரன் (புரட்சிகர சோஷலிச கட்சி), திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்) ஆகியோர் இடம்பெறுவார்கள் என தெரிகிறது.

இந்த பயணம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது காங்கிரசின் கவுரவ் கோகாய் கூறியதாவது:-

மணிப்பூரில் அனைத்தும் நன்றாக இருக்கிறது என்ற பிம்பத்தை உருவாக்க பா.ஜனதா விரும்புகிறது. ஆனால் அங்கு இன்னும் வன்முறை தொடர்கிறது. அதனால்தான் சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

மாநில அரசு எங்கே தவறியது? மக்களுக்கு பெருமளவில் ஆயுதங்கள் எவ்வாறு கிடைத்தது? நிர்வாகம் என்ன செய்து கொண்டிருந்தது? என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.

மாநிலத்தில் 100-க்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக முதல்-மந்திரி பைரேன் சிங்கே ஒப்புக்கொண்டிருக்கிறார். அரசு ஏன் 2 மாதங்களாக தூங்கியது?

இவ்வாறு கவுரவ் கோகாய் கேள்வி எழுப்பினார்.

டி.ஆர்.பாலு

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ் கூறுகையில், 'எதிர்க்கட்சி பிரதிநிதிகள் மணிப்பூர் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்பதை தெரிவிக்க விரும்புகிறோம். மாநிலத்தின் தற்போதைய சூழல் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். அங்கு அமைதி திரும்ப வேண்டும். அரசு தோல்வியடைந்ததால், அங்கு சென்று என்ன தீர்வு கிடைக்கும்? என்று பார்க்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு கூறும்போது, 'எதிர்க்கட்சி பிரதிநிதிகள் மணிப்பூருக்கு நாளை (இன்று) காலையில் செல்கிறார்கள். அங்கு நடந்துள்ள தவறுகள், பாதிப்பு நிலவரங்கள், உயிர்ச்சேதம், பொருட்சதேங்களை ஆய்வு செய்வார்கள்' என்றார்.

புரட்சிகர சோஷலிச கட்சி எம்.பி. பிரேமச்சந்திரன், 'மணிப்பூரில் வன்முறைகள் இன்னும் தொடர்கின்றன. எனவே நாங்கள் நேரடியாக தகவல்களைப் பெற விரும்புகிறோம். கள நிலரவத்தை ஆய்வு செய்து, அமைதிக்கான சில தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை அரசு மற்றும் நாடாளுமன்றத்துக்கு தெரிவிக்க விரும்புகிறோம்' என்று தெரிவித்தார்.


Next Story