விக்சித் பாரத் சங்கல்ப யாத்ரா நிகழ்ச்சி; பொதுமக்களுடன் நேரில் கலந்துரையாடிய பிரதமர் மோடி

காசி சன்சாத் விளையாட்டு போட்டி 2023-ன் கீழ் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
வாரணாசி,
உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் நமோ கட் பகுதியில், காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்ச்சி பிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய மீன்வள துறை இணை மந்திரி எல். முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மற்றும் வாரணாசி இடையேயான காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். அவர் நிகழ்ச்சியில் பேசும்போது, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) வழியே புதிய தொழில்நுட்ப பயன்பாடு நடைபெறுகிறது.
இது ஒரு புதிய தொடக்கம். இதனால், உங்களை என்னால் எளிதில் அடைய முடிகிறது என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில், பிரதமரின் பேச்சை தமிழக பார்வையாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பாஷினி வழியே, தமிழ் மொழிபெயர்ப்பு ஆனது அவர்களை சென்றடைந்தது.
தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் பேசும்போது, விருந்தினர்கள் என்றளவில் இல்லாமல், நீங்கள் அனைவரும் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் என்றளவில் வந்திருக்கின்றீர்கள். காசி தமிழ் சங்கமத்திற்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன்.
தமிழகத்தில் இருந்து காசிக்கு வருவது என்றால் அதற்கு, மகாதேவரின் ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டுக்கு வருவது என பொருள். அதனாலேயே, தமிழகம் மற்றும் காசிக்கு இடையேயான பிணைப்பு என்பது சிறப்பானது என்று அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து, தன்னுடைய நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில், அமைந்துள்ள சேவாப்புரி என்ற கிராமப்புற பகுதிக்கு இன்று நேரில் சென்ற பிரதமர் மோடி விக்சித் பாரத் சங்கல்ப யாத்ரா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அவர் சேவாபுரி பகுதியில் நடந்த பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளை நேரில் பார்வையிட்டார். செஸ், தற்காப்பு கலை உள்ளிட்ட உள்ளரங்கங்களில் நடந்த பல்வேறு போட்டிகளை பார்வையிட்டதுடன் விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகமூட்டினார்.
இதன்பின்னர், காசி சன்சாத் விளையாட்டு போட்டி 2023-ன் கீழ் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவர் விக்சித் பாரத் சங்கல்ப யாத்ரா நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுடன் உரையாடி, அவர்களுடைய குறைகளையும் கேட்டறிந்துள்ளார். இந்நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமிகளுக்கு பரிசுகளை வழங்கி தன்னுடைய பாராட்டுதல்களையும் அவர் தெரிவித்து கொண்டார்.