காங்கிரஸ் அலுவலகம் முன்பு தொண்டர்கள் கொண்டாட்டம்


காங்கிரஸ் அலுவலகம் முன்பு தொண்டர்கள் கொண்டாட்டம்
x

சட்டசபை தேர்தலில் அசுர வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் அலுவலகம் முன்பு தொண்டர்கள் திரண்டு பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

பெங்களூரு:-

வாக்கு எண்ணிக்கை

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணி அளவில் தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்திற்குள் விறுவிறுப்படைந்தது. வாக்குகள் எண்ணப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே காங்கிரஸ் கட்சி பல்வேறு தொகுதிகளில் முன்னிலை வகித்தது. மேலும் நட்சத்திர தலைவர்களான முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, டி.கே.சிவக்குமார், சித்தராமையா உள்ளிட்டோர் தங்கள் தொகுதிகளில் முன்னிலையில் நீடித்து வந்தனர்.

ஆனால் குமாரசாமி தனது சொந்த தொகுதியான சென்னப்பட்டணாவில் தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்தார். எனினும் பல சுற்றுகளுக்கு பின்னர் அவர் 60 ஆயிரம் வாக்குகளை பெற்று முன்னிலைக்கு சென்றார்.

130 தொகுதிகளில்...

அதே சமயம் காங்கிரஸ் வேட்பாளர்கள் அசுர வேகத்தில் முன்னிலை பெற்றனர். குறிப்பாக டி.கே.சிவக்குமார் 1¾ லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றார். சித்தராமையா தன்னை எதிர்த்து போட்டியிட்ட சோமண்ணாவை பின்னுக்கு தள்ளி முன்னேறினார். பிற்பகல் 2 மணி அளவில் 224 தொகுதிகளில் சுமார் 130 தொகுதிகளுக்கும் மேல் காங்கிரஸ் முன்னிலை பெற்றது.

இதனால் காங்கிரஸ் தொண்டர்கள், கட்சி அலுவலகங்கள் முன்பு திரண்டு ஆரவாரம் செய்தனர். பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுளை வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் அலுவலகம் முன்பு பெண் தொண்டர்கள் சிலர் நடனமாடி வெற்றியை கொண்டாடினர்.

பா.ஜனதா அலுவலகம் வெறிச்சோடியது

இதேபோல் பிற பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்து தங்கள் வெற்றியை பலவகைகளில் கொண்டாடினர். அதே சமயம் சுமார் 65 தொகுதிகளில் மட்டுமே பா.ஜனதா முன்னிலை பெற்றது. மேலும் ஜனதா தளம் (எஸ்) கட்சி ஏறக்குறைய 20 தொகுதிகளை மட்டுமே பிடித்தது. இதனால் பெங்களூரு மல்லேசுவரம் பகுதியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகம் தொண்டர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் சேஷாத்திரிபுரம் பகுதியில் உள்ள ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைமை அலுவலகம் முன்பு ஆள்நடமாட்டம் இன்றி காணப்பட்டது.


Next Story