டெல்லி, பஞ்சாப், உ.பி. உள்பட 6 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல்; வாக்குப்பதிவு தொடக்கம்!
5 மாநிலங்கள் மற்றும் டெல்லியில் உள்ள 3 மக்களவை மற்றும் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.
புதுடெல்லி,
5 மாநிலங்கள் மற்றும் டெல்லியில் உள்ள 3 மக்களவை மற்றும் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அசம்கர் மற்றும் ராம்பூர் மற்றும் பஞ்சாபில் உள்ள சங்ரூர் ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
அதேபோல, டெல்லியில் உள்ள ராஜிந்தர் நகர், ஜார்கண்டில் உள்ள மந்தர், ஆந்திராவின் ஆத்மகூர் மற்றும் அகர்தலாவில் உள்ள டவுன் போர்டோவாலி, திரிபுராவில் உள்ள சுர்மா மற்றும் ஜபராஜ்நகர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
மேலும், தலைநகர் டெல்லியில் காலியாக உள்ள ராஜிந்தர் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடையும். தேர்வு முடிவுகள் ஜூன் 26ம் தேதி வெளியிடப்படும்.
ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, காலியான டெல்லி ராஜிந்தர் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தொகுதியில், பாஜக முன்னாள் கவுன்சிலர் ராஜேஷ் பாட்டியா மற்றும் காங்கிரஸின் பிரேம் லதா ஆகியோருக்கு எதிராக ஆம் ஆத்மி சார்பில் துர்கேஷ் பதக் போட்டியிடுகிறார்.
முன்னதாக, ராஜீந்தர் நகர் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.1 லட்சத்து 64 ஆயிரம் தகுதியுள்ள வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.