பெங்களூரு மாநகராட்சி தேர்தல்: ஒரு வாரத்தில் வார்டு இடஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும் - கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


பெங்களூரு மாநகராட்சி தேர்தல்: ஒரு வாரத்தில் வார்டு இடஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும் - கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

பெங்களூரு மாநகராட்சி தேர்தல் தொடர்பாக வார்டு இடஒதுக்கீட்டை ஒரு வாரத்தில் அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

மாநகராட்சி தேர்தல்

பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலின் பதவி காலம் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. ஆனால் மாநகராட்சிக்கு தேர்தல் குறித்த காலத்தில் நடத்தப்படவில்லை. இதையடுத்து அரசு நிர்வாக அதிகாரியை நியமனம் செய்தது. மேலும் பெங்களூரு மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கையை உயர்த்த அரசு முடிவு செய்தது. அதாவது 198-ல் இருந்து 243 வார்டுகளாக உயர்த்த அரசு சட்டம் இயற்றியது. இதையடுத்து மாநகராட்சி தலைமை கமிஷனர் தலைமையில் வார்டு மறுவரையறை குழுவை அமைத்தது.

இதற்கிடையே பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மாநகராட்சிக்கு உடனடியாக தேர்தல் நடத்தும்படி உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மனு கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வார்டு மறுவரையறை பணிகள் மற்றும் இடஒதுக்கீடு குறித்த பணிகளை 8 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டனர். அதன் பிறகு மாநில தேர்தல் ஆணையம் மாநகராட்சி தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

இடஒதுக்கீட்டு பட்டியல்

இதையடுத்து அந்த வார்டுகள் மறுவரையறை குழு வார்டு மறுவரையறை பணிகள் குறித்த அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட மாநில அரசு அதை அரசாணையாக பிறப்பித்தது. மேலும். இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசால் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவும் தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது. அதில் பின்தங்கிய சமூகங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் இடங்களில் 33 சதவீதம் ஒதுக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டது.இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 22-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. சில தொழில்நுட்ப காரணங்களால் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் பெங்களூரு மாநகராட்சி தேர்தல் தொடர்பான மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பெங்களூரு மாநகராட்சி வார்டு இடஒதுக்கீட்டை ஒரு வாரத்தில் அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதன் பிறகு மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். ஒரு வாரத்திற்குள் மாநில அரசு வார்டு இடஒதுக்கீட்டு பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story