மங்களூரு-மும்பை இடையே நீர்வழி போக்குவரத்து
மங்களூரு-மும்பை இடையே விரைவில் நீர்வழி போக்குவரத்து தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
மங்களூரு-
மங்களூரு-மும்பை இடையே விரைவில் நீர்வழி போக்குவரத்து தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
தட்சிண கன்னடா மாநாடு
தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளில் பா.ஜனதா கட்சி சார்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் மாநில முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, நல திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஹெலிகாப்டர் மூலம் மங்களூரு மேரிஹில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்திறங்கினார்.
அப்போது அவரை மந்திரிகள் அங்கார், சுனில் குமார், எம்.எல்.ஏ.க்கள் வேதவியாஸ் காமத், மங்களூரு வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.பரத் செட்டி, கலெக்டர் ரவிக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்றனர்.
காட்டு தீயை அணைக்க முடிவு
அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியதாவது:-மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி வனப்பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இந்த தீ விபத்தை தடுப்பது குறித்து, மாவட்ட கலெக்டருடன் ஆலோசனை நடத்தியுள்ேளன். ஹெலிகாப்டரை வைத்து தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால் இது குறித்து நிரந்தர முடிவு எடுக்கவில்லை. குடிநீர் பஞ்சத்தை போக்க ஆழ்துளை கிணறுகள் தோண்டப்படும். பெங்களூரு-மைசூரு 10 வழிச்சாலையில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. நேரடியாக வந்து பேச முடியாமல் போராட்டம் நடத்துகின்றனர். தேர்தல் நெருங்குவதால் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.500 கோடி வரவு வைப்பு
இதையடுத்து ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து, கார் மூலம் மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்றார். அப்போது மாநாட்டில் அவர் பேசியதாவது:- தட்சிண கன்னடா, உடுப்பி கடலோர மாவட்டம் என்பதால் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளது. இங்கு கர்நாடகா, கேரளாவை சேர்ந்த ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அனைவரும் கடும் உழைப்பாளிகள். மேலும் எதையும் தெளிவாக பேச கூடியவர்கள். தட்சிண கன்னடா மாவட்டத்தில் 24 லட்சம் பேர் உள்ளனர். இதில் 21 லட்சம் பேர் மத்திய, மாநில அரசுகளின் நல திட்ட உதவிகளை பெற்றுள்ளனர். ஒரு லட்சத்து 39 ஆயிரத்து, 571 பேர் பிரதான மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். இதுவரை ரூ.500 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
இலவச வீட்டுமனை, வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. கல்வி படிப்பை தொடர முடியாத மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகைகள் வழங்கப்படுகிறது. பள்ளி, கல்லுரியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. நாராயண குருவின் பெயரில் ரூ.25 கோடி செலவில் 4 விடுதிகள் கட்டப்பட்டிருக்கிறது. மேலும் 4 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
நீர் வழி போக்குவரத்து
கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்களுக்கு டீசல், மண்ெணண்ணெய் மானியம் நேரடியாக அவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மங்களூருவில் இருந்து கார்வார், கோவா வழியாக மும்பைக்கு நீர்வழி போக்குவரத்து தொடக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் இதற்கான பணிகள் நடைபெறும். தினமும் மக்களை பற்றி யோசிக்கும் பா.ஜனதாவை காங்கிரஸ் 40 சதவீதம் கமிஷன் அரசு என்று விமர்சனம் செய்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 80 சதவீதம் கமிஷன் பெறப்பட்டது. இதை மறைக்க காங்கிரஸ் கட்சியினர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
மந்திரி, எம்.எல்.ஏ.வை கடிந்து கொண்ட பசவராஜ் பொம்மை
மாநாடு மேடையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசி கொண்டிருந்தார். அப்போது வேதவியாஸ் காமத் எம்.எல்.ஏ. , தன்னுடன் இருந்த எம்.எல்.ஏ.வுடன் பேசி கொண்டிருந்தார். இதை பார்த்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, நீங்கள் பேசி முடித்துவிட்டால், போதுமா, நாங்கள் பேச வேண்டாமா? என்று கடிந்து கொண்டார். இதையடுத்து அவர் அமைதியாகினார். இதைபோல முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ரப்பர் தொழிலாளிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்து பேசினார். அப்போது மந்திரி அங்கார் குறுக்கிட்டு, சில தகவலை கூறினார். அதை கேட்ட பசவராஜ் பொம்மை நீ கல்லா (திருடன்) அதை ஏன் இப்போது கூறவேண்டும். முன்கூட்டியே கூறவேண்டியதுதான் என்று கடிந்து கொண்டார். இது நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது.