ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு: பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜிக்கு நீதிமன்ற காவல் செப்- 14 வரை நீட்டிப்பு


ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு:  பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜிக்கு நீதிமன்ற காவல் செப்- 14 வரை நீட்டிப்பு
x

ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் மேற்குவங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவரது பெண் உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோரின் நீதிமன்ற காவல் செப். 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

கடந்த 2016-ம் ஆண்டில் மேற்கு வங்க கல்வித் துறையில் 13,000 ஆசிரியர்கள், ஊழியர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் பணி நியமனத்தில் சில ஆயிரம் பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஏராளமானோர் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

அப்போதைய கல்வித் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியிடம் கடந்த ஏப்ரல் 25, மே 18-ம் தேதிகளில் சிபிஐ பல மணி நேரம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் பெருமளவில் பணப் பரிமாற்ற மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பான அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கியது.

கொல்கத்தாவில் உள்ள மந்திரி பார்த்தா சாட்டர்ஜியின் வீடு, அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்கள் என 13 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சில தினங்கள் முன் சோதனை நடத்தினர். அப்போது அமைச்சருக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அந்த வீட்டில் இருந்து ரூ.21 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அதோடு ரூ.54 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள், ரூ.79 லட்சம் மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 40 பக்க குறிப்புகள் கொண்ட டைரியை அதிகாரிகள் மீட்டதாகவும், பல சொத்து பத்திரங்களையும் மீட்டதாகவும் தகவல் வெளியாகின.

தொடர்ந்து ஆசிரியர் நியமனத்தில் பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து , பார்த்தா சாட்டர்ஜி, அவருடைய நெருங்கிய பெண் கூட்டாளியான அர்பிதா முகர்ஜியை கைது செய்தனர். இவர்களின் நீதிமன்ற காவல் முடிவடைந்தது. இந்நிலையில் இன்று ( ஆக. 31)) வழக்கை விசாரித்த நீதிபதி செப். 14 வரை காவல் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story