அணி தோல்வியடைந்தால் ரசிகர்கள் சில வார்த்தைகள் கூற தான் செய்வார்கள் - அர்ஷ்தீப் சிங் பெற்றோர்...
அணி தோல்வியடைந்தால் ரசிகர்கள் சில வார்த்தைகள் கூற தான் செய்வார்கள் என இந்திய அணியின் பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கின் பெற்றோர் தெரிவித்துள்ளார்.
சண்டிகர்,
ஆசிய கோப்பை 20 தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன் தினம் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில், இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது.
இப்போட்டியின் போது முக்கியமான கட்டத்தில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் கேட்சை ஒன்றை தவற விட்டார். அந்த கேட்ச் தவறவிடப்பட்டது இந்தியா தோல்வியடைய முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து ரசிகர்கள் டுவிட்டர் உள்பட சமூகவலைதளத்தில் அர்ஷ்தீப் சிங்கை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது மகனை கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சிப்பது குறித்து அர்ஷ்தீப்பின் பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அர்ஷ்தீப்பின் தந்தை தர்ஷன் சிங் கூறுகையில், நாங்கள் போட்டியை பார்க்க சென்றோம். இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போதுமே பரபரப்பு நிறைந்தது தான். தங்கள் அணி தோல்வியடையும்போது ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு, கோபமடைந்து சில வார்த்தைகளை கூறத்தான் செய்வார்கள். நாங்கள் இதை நேர்மறையாக எடுத்துக்கொள்கிறோம். இதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை' என்றார்.
அர்ஷ்தீப்பின் தாயார் பல்ஜித் கவூர் கூறுகையில், நாங்கள் பாகிஸ்தானுடனான முதல் போட்டியையும் பார்த்தோம். இரண்டாவது போட்டியும் மிகவும் நன்றாக இருந்தது. ஆனால், சிறு தவறுகள் நடைபெறலாம், தவறுகள் யாராலும் நடைபெறலாம்.
மக்கள் பேசும் பழக்கத்தை கொண்டவர்கள், அவர்கள் பேசட்டும். மக்கள் அவரை (அர்ஷ்தீப்) பற்றி விமர்சிக்கிறார்கள் என்றால் அவரை விரும்புகிறார்கள் என்று அர்த்தம்' என்றார்.