சாத்தியமான வாக்குறுதிகளை மட்டுமே தேர்தல் அறிக்கையில் சேர்க்கிறோம்; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி


சாத்தியமான வாக்குறுதிகளை மட்டுமே தேர்தல் அறிக்கையில் சேர்க்கிறோம்; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
x
தினத்தந்தி 3 April 2023 6:45 PM GMT (Updated: 3 April 2023 6:46 PM GMT)

சாத்தியமான வாக்குறுதிகளை மட்டுமே தேர்தல் அறிக்கையில் சேர்க்கிறோம் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

பெங்களூரு:

சுகாதாரத்துறை மந்திரியும், பா.ஜனதா தேர்தல் அறிக்கை குழு தலைவருமான சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

உண்மை தகவல்கள்

நாங்கள் இன்று (நேற்று) ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினோம். காங்கிரஸ் கட்சி 1, 2, 3 என்று வாக்குறுதியை வெளியிடுகிறார்கள். அக்கட்சி நிறைவேற்ற முடியாத விஷயங்களை வாக்குறுதிகளாக அளித்துள்ளது. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும். ஆனால் நாங்கள் அப்படி அல்ல. சம்பந்தப்பட்ட மக்களின் கருத்துகளை கேட்டறிந்து உண்மை தகவல்கள் அடிப்படையில் தேர்தல் வாக்குறுதிகளை வழங்க முடிவு செய்கிறோம். நிறைவேற்ற சாத்தியமுள்ள வாக்குறுதிகளை மட்டுமே நாங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்க்கிறோம்.

அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் உயர் பன்னோக்கு ஆஸ்பத்திரி அமைப்பதாக ஜனதா தளம் (எஸ்) சொல்கிறது. இன்னும் தாலுகா தலைநகரங்களிலேயே சரியான ஆஸ்பத்திரிகளை நம்மால் அமைக்க முடியவில்லை. நிலைமை இவ்வாறு இருக்கும்போது, ஜனதா தளம் (எஸ்) சொல்வது போல், பஞ்சாயத்துகளில் உயர் பன்னோக்கு ஆஸ்பத்திரி அமைக்க முடியுமா?.

இந்தியாவுக்கு பாதிப்பு

சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்து அதன் அடிப்படையில் நாங்கள் தேர்தல் அறிக்கையை தயாரிக்கிறோம். ஓட்டல்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை பொய் மூட்டைகள் அல்ல.

ரஷியா-உக்ரைன் போரால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதனால் பிற நாடுகளை விட இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைவாக உள்ளது.

இவ்வாறு சுதாகர் கூறினார்.


Next Story