காங்கிரஸ் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்; முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு


காங்கிரஸ் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்; முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு
x

கர்நாடக மக்களுக்காக காங்கிரஸ் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் 5 ஆண்டுகளில் நிறைவேற்றுவோம் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக அரசின் பெண்கள்-குழந்தைகள் நலத்துறை சார்பில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடக்க விழா மைசூருவில் நேற்று நடைபெற்றது. விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-

நாங்கள் மக்களுக்கு கொடுத்த உத்தரவாத வாக்குறுதி திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். இன்று(நேற்று) 4-வதாக கிரகலட்சுமி திட்டத்தை தொடங்கியுள்ளோம். அதே போல் நாங்கள் மக்களுக்கு கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் 5 ஆண்டுகளில் நிறைவேற்றுவோம். காங்கிரஸ் ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்து இருக்கிறது. இந்த 100 நாட்களில் அரசின் சாதனைகள் குறித்து ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளோம்.

கர்நாடகத்தில் 1.26 கோடி குடும்பங்கள் உள்ளன. அந்த குடும்பங்களின் பெண்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதுவரை 1.30 கோடி குடும்ப தலைவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 11-ந் தேதி சக்தி திட்டத்தை தொடங்கியுள்ளோம். இதில் இதுவரை பெண்கள் 48 கோடி முறை பயணித்துள்ளனர். அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் கூடுதலாக 5 கிலோ அரிசிக்கு பதிலாக பணம் வழங்கியுள்ளோம். கிரகஜோதி திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. வேலையில்லாத படித்த இளைஞர்களுக்கான நிதி உதவி திட்டமும் டிசம்பர் மாதம் அமல்படுத்தப்படும். இந்த உத்தரவாத திட்டங்களுக்கு ரூ.56 ஆயிரம் கோடி செலவாகும். சிறுபான்மையினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மக்களின் நலன் சார்ந்த ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

விழாவில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்-மந்திரியுமான டி.கே.சிவக்குமார் பேசும்போது கூறியதாவது:-

நாட்டில் மாற்றத்திற்கான காற்று வீசத்தொடங்கியுள்ளது. ராகுல் காந்தி இங்கு ஒற்றுமை பாதயாத்திரை நடத்தினார். சாம்ராஜ்நகரில் இருந்து ராய்ச்சூர் வரை 510 கிலோ மீட்டர் தூரத்திற்கு அவர் யாத்திரை நடத்தினார். அப்போது அவர் விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்களின் பிரச்சினைகளை கேட்டு அறிந்தார். அவற்றுக்கு தீர்வு காணும்படி எனக்கும், சித்தராமையாவுக்கும் அவர் உத்தரவிட்டார்.

அதன் பிறகு நடைபெற்ற தேர்தலின்போது நாங்கள் 5 உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தோம். அதை ஏற்று நீங்கள் காங்கிரசை ஆதரித்தீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் 4 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தியுள்ளோம். இன்னும் ஒரு திட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளோம். 100 நாட்களில் 4 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தியுள்ளோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story