நாடாளுமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு பதில் கிடைக்கும்வரை கேள்வி எழுப்புவோம் - டி.ஆர்.பாலு


நாடாளுமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு பதில் கிடைக்கும்வரை கேள்வி எழுப்புவோம் - டி.ஆர்.பாலு
x

நாடாளுமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு பதில் கிடைக்கும்வரை கேள்வி எழுப்புவோம் என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் உள்ள அண்ணா-கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில்தான் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 142 நாட்கள் கழித்து கவர்னர் அதனை திரும்ப அனுப்பியுள்ளார், இது சரியான நடைமுறை அல்ல. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற தமிழக சட்டமன்றத்துக்கு அதிகாரமும், உரிமையும் கிடையாது என கவர்னர் கூறுவது தவறானது. கவர்னரின் இந்த செயலை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதை சுட்டிக்காட்டவே கவனஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

40-க்கும் மேற்பட்டோர் சூதாட்டத்தால் இறந்துள்ளனர். மக்களின் குறைகளை போக்கும் பொறுப்புள்ள அரசாங்கம் இயற்றிய சட்டத்தை கவர்னர் நிராகரித்தது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என கோரினோம். ஆனால் சபாநாயகர், முதலில் ராணுவ மந்திரியை பேச அனுமதித்தார். பின்னர் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரியை அனுமதித்தார். ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை,

எனவே, சபாநாயகர் நடந்து கொண்ட விதம் தவறானது என கூறிவிட்டு அலுவல் ஆய்வுக்குழுவை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம். ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மத்திய அரசு பதில் தரும்வரை தொடர்ந்து கேள்வி எழுப்புவோம்.

தமிழக கவர்னர் ஏட்டிக்கு போட்டியாக நடந்துகொண்டிருக்கிறார். அரசியல் சாசனம் தெரியாத ஒருவர் கவர்னராக இருக்கிறார். அவரை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று அவர் கூறினார்.


Next Story