தசரா யானை அபிமன்யுவுக்கு எடை சுமக்கும் பயிற்சி


தசரா யானை அபிமன்யுவுக்கு எடை சுமக்கும் பயிற்சி
x
தினத்தந்தி 30 Sep 2023 6:45 PM GMT (Updated: 30 Sep 2023 6:46 PM GMT)

மைசூரு தசரா விழாவையொட்டி தசரா யானை அபிமன்யுவுக்கு எடை சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. 600 கிலோ எடை கொண்ட மணல் மூட்ைடயை சுமந்து கம்பீரமாக நடந்து சென்றது.

மைசூரு

மைசூரு தசரா விழா

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 15-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இந்த ஆண்டு மழை பெய்யாததால் மாநிலத்தில் வறட்சி நிலவுவதால் தசரா விழாவை எளிமையாக கொண்டாட முடிவு ெசய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தசரா விழாவை சாமுண்டி மலையில் வைத்து இசையமைப்பாளர் ஹம்சலேகா தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும் தசரா விழாவில் கலந்துகொள்ள தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு யானை உள்பட 14 யானைகள் 2 கட்டமாக மைசூருவுக்கு வந்துள்ளன. அந்த யானைகள் மைசூரு அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

எடை சுமக்கும் பயிற்சி

அரண்மனை வளாகத்தில் தங்கி உள்ள யானைகளுக்கு தினமும் நடைபயிற்சி, மணல் மூட்டை சுமக்கும் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்புசவாரி ஊர்வலத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை அபிமன்யு யானை சுமந்து கம்பீர நடைபோட மற்ற யானைகள் அதனை பின்தொடர்ந்து செல்லும். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

இதனால் தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு உள்பட 14 யானைகளுக்கு எடை சுமக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அபிமன்யு யானைக்கு 1,000 கிலோ வரை எடை சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. படிப்படியாக எடை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

கம்பீர நடை

இந்த நிலையில் நேற்று காலை 7.15 மணி அளவில் அபிமன்யு யானைக்கு எடை சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. மற்ற யானைகளுக்கு எடை சுமக்கும் பயிற்சி அளிக்கப்படவில்லை. சுமார் 600 கிலோ எடை கொண்ட மணல் மூட்டையை அபிமன்யு மீது ஏற்றப்பட்டது.

அந்த மணல் மூட்டையை சுமந்து அபிமன்யு யானை கம்பீரமாக ராஜவீதியில் நடைபோட்டது. அதனை தொடர்ந்து மற்ற யானைகளும் வந்தன.

அரண்மனையில் இருந்து தீப்பந்து விளையாட்டு மைதானம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை ஏராளமான மக்கள் பார்த்து ரசித்தனர். ஏராளமானோர் தங்கள் ெசல்போனில் படம் எடுத்து ெகாண்டனர்.


Next Story