கைக்குழந்தையை ரூ. 2 லட்சத்திற்கு விற்று ஐபோன் வாங்கிக்கொண்டு 'ஹனிமூன்' சென்ற கொடூர தம்பதி
தங்கள் குழந்தையை 2 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்த தம்பதி புதிய செல்போன் வாங்கிக்கொண்டு ஹனிமூன் சென்றுள்ளனர்.
கொல்கத்தா,
மேற்குவங்காள மாநிலம் வடக்கு பர்கானஸ் மாவட்டம் கர்டஹ் பகுதியை சேர்ந்தவர் ஜெய்தேஷ் கோஷ். இவரது மனைவி ஷதி. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இதனிடையே, ஷதிக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், ஜெய்தேஷ் - ஷதி தம்பதி தங்களுக்கு பிறந்த பெண் குழந்தையை 2 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். ஒரு மாதத்திற்கு முன் நடந்த இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பச்சிளம் குழந்தையை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த 2 லட்ச ரூபாய் பணத்தில் ஜெய்தேஷ் - ஷதி தம்பதி புதிய ஐபோன் வாங்கியுள்ளனர். பின்னர் எஞ்சிய பணத்தில் கணவன் - மனைவி இருவரும் 'ஹனிமூன்' சென்றுள்ளனர். டிஹா கடற்கரை உள்பட பல்வேறு சுற்றுலாதலங்களுக்கு இந்த தம்பதி பயணம் மேற்கொண்டு குழந்தை விற்றதில் கிடைத்த பணத்தை உல்லாசமாக செலவு செய்துள்ளனர். மேலும், தாங்கள் வாங்கிய ஐபோன் மூலம் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விற்பனை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தையை மீட்டனர். மேலும், ஜெய்தேஷ் - ஷதி தம்பதியை கைது செய்த போலீசார் குழந்தையை வாங்கிய பிரியங்கா கோஷ் என்ற பெண்ணையும் கைது செய்தனர்.