மேற்கு வங்காளம்: மாணவர்களின் சிக்கன் லெக் பீசை பதுக்கிய ஆசிரியர்கள்; கொந்தளித்த பெற்றோர்கள்


மேற்கு வங்காளம்: மாணவர்களின் சிக்கன் லெக் பீசை பதுக்கிய ஆசிரியர்கள்; கொந்தளித்த பெற்றோர்கள்
x

மேற்கு வங்காளத்தில் மதிய உணவு திட்டத்தில் சிக்கன் லெக் பீசை எடுத்து பதுக்கிய ஆசிரியர்களை அறையில் தள்ளி பெற்றோர்கள் பூட்டிய சம்பவம் நடந்து உள்ளது.


கொல்கத்தா,


மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் இங்கிலீஷ் பஜார் பகுதியில் அம்ரிதி காலனியில் முதன்மை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அவற்றில், மாணவ மாணவிகளுக்கு சிக்கன் கறி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், அவற்றில் உள்ள லெக் பீசை ஆசிரியர்கள் சிலர் எடுத்து தங்களுக்கு வைத்து கொண்டனர் என கூறப்படுகிறது.

இதன்பின் மீதமுள்ள சிக்கனின் கழுத்து, வயிறு உள்ளிட்ட பிற பகுதிகளை மாணவர்களுக்கு கொடுத்து உள்ளனர். இதனை கவனித்த மாணவ மாணவிகளில் சிலர் தங்களது பெற்றோரிடம் அதுபற்றி தெரிவித்து உள்ளனர்.

இதனால், கொந்தளித்த பெற்றோர்கள் அடுத்த நாள், அந்த பள்ளிக்கு நேரில் சென்று ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதன்பின்னர், 6 ஆசிரியர்களை அறை ஒன்றிற்குள் தள்ளி பூட்டி வைத்தனர்.

ஏறக்குறைய 4 மணிநேரம் வரை அறைக்குள்ளேயே ஆசிரியர்கள் இருந்து உள்ளனர். அதன்பின்பு தகவல் அறிந்து, போலீசார் வந்து பெற்றோரை சமரசப்படுத்திய பின்னரே ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் கடந்த ஜனவரியில் இருந்து மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தில் சிக்கன் மற்றும் பழங்களை அறிமுகப்படுத்தியது.

எனினும், ஊட்டச்சத்து பெற வழங்கப்படும் உணவு தானியங்களை ஆசிரியர்கள் சிலர் தவறாக பயன்படுத்தி கொள்கின்றனர் என்றும் உணவின் தரம் மோசமடைந்து உள்ளது என்றும் பெற்றோர் புகாராக தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் இடையேயான மோதல் பற்றிய இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.


Next Story