மேற்கு வங்காளம்: பெண் கைதிகள் கர்ப்பம் தரிக்கும் விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
பெண் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்குள் ஆண் பணியாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட வேண்டும் என ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லி,
மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில், மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ள பெண் கைதிகள் கர்ப்பிணியாவதும், அவர்களுக்கு குழந்தைகள் பிறப்பதும் பெரும் சர்ச்சையாகி உள்ளது.
மேற்கு வங்காளத்தில் சிறைகளில் காணப்படும் நிலைமைகள் பற்றி சுப்ரீம் கோர்ட்டு மூத்த வழக்கறிஞர் கவுரவ் அகர்வால் என்பவர் தானாக முன்வந்து கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர், சிறை சீர்திருத்தங்கள் மற்றும் கூர்நோக்கு இல்லங்கள் தொடர்புடைய வழக்கு ஒன்றில் தாக்கல் செய்த விவரங்களில், மாநிலத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைப்பட்டிருக்கும் பெண் கைதிகள் கர்ப்பமடைந்து, அவர்களுக்கு இதுவரை 196 குழந்தைகள் பிறந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுபற்றி ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி டி.எஸ். சிவஞானம் மற்றும் நீதிபதி சுப்ரதிம் பட்டாச்சார்யா ஆகியோர் அடங்கிய அமர்வு தீவிர கவனத்தில் கொண்டுள்ளது. குற்ற வழக்குகளை விசாரிக்கும் அமர்வு முன் இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் அந்த அமர்வு அறிவித்தது.
இந்த வழக்கில், பெண் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்குள் ஆண் பணியாளர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று ஐகோர்ட்டில் அகர்வால் தெரிவித்து இருக்கிறார். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி அசானுதீன் அமனுல்லா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு ஒன்று கவனத்தில் கொண்டுள்ளது.
இந்த வழக்கில் சிறைகளின் நிலைமையை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை தங்களிடம் சமர்ப்பிக்கும்படி கவுரவ் அகர்வாலிடம் அந்த அமர்வு கேட்டு கொண்டுள்ளது.