மேற்குவங்காள பஞ்சாயத்து தேர்தல் வன்முறை: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
மேற்குவங்காள பஞ்சாயத்து தேர்தல் வன்முறையில் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
கொல்கத்தா,
மேற்குவங்காளத்தில் 73 ஆயிரத்து 887 இடங்களுக்கான பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 2 லட்சத்து 6 லட்சம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பஞ்சாயத்து தேர்தல் நேற்று நடைபெற்றது. 5 கோடியே 67 லட்சம் தகுதியான வாக்காளர்கள் உள்ள நிலையில் தேர்தலில் 66 சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 11-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படுகிறது.
இதனிடையே, மேற்குவங்காளத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
குறிப்பாக, பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்ற நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இதில் பலர் கொல்லப்பட்டனர்.
அரசியல் கட்சியினருக்கு இடையே நடந்த இந்த மோதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கபட்ட போதும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், மேற்குவங்காள பஞ்சாயத்து தேர்தலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 14 ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை இன்று 15 ஆக அதிகரித்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், பாஜக, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறை சம்பவங்கள் காரணமாக நேற்று சில இடங்களில் நிறுத்திவைக்கப்பட்ட தேர்தல் இன்று மீண்டும் நடைபெற்றது.