'ஆட்சி அதிகாரம் யாருக்கும் நிரந்தரம் அல்ல' அமித்ஷாவுக்கு ஒவைசி பதிலடி


ஆட்சி அதிகாரம் யாருக்கும் நிரந்தரம் அல்ல அமித்ஷாவுக்கு ஒவைசி பதிலடி
x

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், அதிகாரம் யாரிடமும் நிரந்தரமாக இருக்காது என்பதை மறந்து விடுகிறார்கள் என்று ஓவைசி பேசினார்.

ஆமதாபாத்,

குஜராத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர், " 2002-ம் ஆண்டு பாடம் கற்றுத்தந்ததைத்தொடர்ந்து சமூக விரோத சக்திகள் வன்முறையில் ஈடுபடுவதை நிறுத்தி விட்டன, மாநிலத்தில் பா.ஜ.க. நிரந்தர அமைதியை ஏற்படுத்தி உள்ளது"என குறிப்பிட்டார்.

2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவமும், அதைத் தொடர்ந்து பெரும் கலவரங்களும் மூண்டதையே அவர் இப்படி குறிப்பிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், தனது ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஆமதாபாத்தில், அந்தக் கட்சித்தலைவர் ஒவைசி நேற்று பிரசாரம் செய்தார். அவர் அமித்ஷாவுக்கு பதிலளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, "2002-ம் ஆண்டு நீங்கள் (அமித்ஷா) கற்றுத்தந்த பாடம், பில்கிஸ் பானு வழக்கில் கற்பழிப்பு குற்றவாளிகளை நீங்கள் விடுதலை செய்வீர்கள் என்பதாகும். பில்கிஸ் பானு முன்னிலையில் அவரது 3 வயது குழந்தையை கொலை செய்தவர்களை நீங்கள் விடுதலை செய்து விடுவீர்கள் என்ற பாடத்தைத்தான் நீங்கள் கற்றுத்தந்தீர்கள். நீங்கள் பாடம் கற்றுத்தந்தது பற்றி பேசுகிறீர்கள். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், அதிகாரம் யாரிடமும் நிரந்தரமாக இருக்காது என்பதை மறந்து விடுகிறார்கள். யாருக்கும் பதவி நிரந்தரம் அல்ல. அது ஒரு நாளில் பறிக்கப்பட்டு விடும்" என கூறினார்.


Next Story