"லாலு கட்சிக்கும் நிதிஷ்குமார் துரோகம் செய்வார்" - பா.ஜ.க. எச்சரிக்கை


லாலு கட்சிக்கும் நிதிஷ்குமார் துரோகம் செய்வார் - பா.ஜ.க. எச்சரிக்கை
x

எங்களுக்கு செய்தது போல உங்களுக்கும் நிதிஷ்குமார் துரோகம் செய்வார் என்று லாலு காட்சிக்கு பா.ஜ.க. எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாட்னா,

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் கட்சி நேற்று முன்தினம் அதிரடியாக விலகியதை அடுத்து, பீகாரில் ஐக்கிய ஜனதாதளம், பா.ஜ.க. கூட்டணி அரசின் முதல்-மந்திரியாக பதவி வகித்து வந்த நிதிஷ்குமார் பதவி விலகினார். அவர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவுடன் புதிய அரசை நேற்று அமைத்துள்ளார். இதையொட்டி பா.ஜ.க. மூத்த தலைவர் சுஷில் மோடி, பாட்னாவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நீங்கள் (நிதிஷ்குமார்) எங்கள் கூட்டணி கட்சியாக இருந்தீர்கள். நாங்கள் உங்கள் கட்சியை உடைத்தாலும் கூட, ஒட்டுமொத்த ஐக்கிய ஜனதாதளமும் எங்களோடு சேராமல், நாங்கள் புதிய அரசு அமைக்க முடியாது. நாங்கள் பீகாரில் நிதிஷ் குமாரை 5 முறை முதல்-மந்திரி ஆக்கி உள்ளோம்.

பீகாரில் 2020-ம் ஆண்டு ஆட்சி அமைக்க மக்கள் வழங்கிய உத்தரவு, பிரதமர் மோடிக்கானது. அது நிதிஷ் குமாருக்கானதல்ல. பிரதமர் மோடி பெயரால்தான் நீங்கள் (நிதிஷ்குமார்) ஓட்டு வாங்கினீர்கள். உங்கள் ஆதரவு ஓட்டுகள் என்றால், நீங்கள் வென்ற இடங்களின் எண்ணிக்கை 45-க்குள் அடங்கி இருக்காது.

உங்கள் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவுக்கு எதிராக ஊழல் வழக்கு விசாரணை தொடங்கி உள்ளது. அவருக்கு எதிராக சாட்சியம் உள்ளது. அதன் விளைவாக அவர் சிறைக்கு செல்லலாம். உங்கள் நோக்கம் என்ன? நீங்கள் ராஷ்டிரிய ஜனதா தளத்தை உடைக்க விரும்புகிறீர்களா? இது அந்தக் கட்சியை உடைப்பதற்கான உங்கள் சதியா? நீங்கள் முதல்-மந்திரியாக தொடர விரும்புகிறீர்களா? லாலுவுக்கு உடல்நலம் சரியில்லை. அவரது மகன் எந்த நேரத்திலும் சிறைக்கு போகலாம். அவர் (நிதிஷ்குமார்) எங்களுக்கு செய்ததுபோல, ராஷ்டிரிய ஜனதாதளத்துக்கும் துரோகம் செய்யலாம். ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர்கள் எச்சரிக்கையாக இருங்கள்.

துணை ஜனாதிபதி பதவி

நிதிஷ் குமார் துணை ஜனாதிபதி பதவிக்கு வர விரும்பினார். இதுகுறித்து அறிய பா.ஜ.க.வுக்கு தூது அனுப்பினார். அவரது ஆட்கள் நிதிஷ்குமாரை துணை ஜனாதிபதி ஆக்குங்கள் என்றார்கள். இது நடக்காததும், கூட்டணி முறிவுக்கு காரணமாக இருக்கலாம்.

ஐக்கிய ஜனதாதளம் 45 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள நிலையில், 79 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள தேஜஸ்வி யாதவ்தான் உண்மையான முதல்-மந்திரியாக இருப்பார். நிதிஷ்குமார் ரப்பர் ஸ்டாம்பாகத்தான் இருப்பார் என்று அவர் கூறினார்.

பா.ஜ.க. போராட்டம்

பாட்னாவில், நிதிஷ் குமார் தலைமையிலான புதிய மகா கூட்டணி அரசுக்கு எதிராக பா.ஜ.க. சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் ரவி சங்கர் பிரசாத், சுஷில் மோடி, நித்யானந்த் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story