மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் பேசியது என்ன? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்


மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் பேசியது என்ன? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
x

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் பேசியது என்ன என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

புதுடெல்லி,

டெல்லி சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. இதில் அரசியல் தொடர்பாக ஏதும் பேசவில்லை. பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க எந்த திட்டமும் இல்லை.

கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை விரைவுப்படுத்த கோரிக்கை வைத்தோம். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை துரிதமாக செயல்படுத்த கோரிக்கை விடுத்தோம். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பாதிப்பு பற்றி அமித்ஷாவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை பற்றி உள்துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி உள்ளோம்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை,பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளது பற்றி மத்திய உள்துறை மந்திரியிடம் கூறினேன். தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். என்று கூறினார்.

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு 'நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அதை பற்றி இப்போது கருத்து கூற இயலாது என எடப்பாடி பழனிசாமி கூறினார்.


Next Story