ஷாரிக்கின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் எவை?


ஷாரிக்கின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் எவை?
x

ஷாரிக்கின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் எவை? என கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் பம்ப்வெல் அருகே நாகுரி பகுதியில் கடந்த 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் வெடி குண்டு வெடித்தது. பின்னர் அது டைமர் வெடிகுண்டு என்பதை போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக பயங்கரவாதி ஷாரிக் கைது செய்யப்பட்டு உள்ளார். முன்னதாக நாசவேலையில் ஈடுபட திட்டமிட்ட அவர் மைசூரு டவுன் மேட்டுஹள்ளி அருகே லோகநாயக்கா நகர் 10-வது தெருவில் மோகன்குமார் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார்.

இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு சோதனை நடத்தினர். நேற்று அந்த வீட்டிற்கு மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மங்களூருவுக்கு திரும்பிய அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஷாரிக் தங்கியிருந்த வீட்டில் இருந்து வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. தீப்பெட்டிகள், சல்பர், சல்பியூரிக் ஆசிட், பாஸ்பரஸ், பேட்டரிகள், சர்க்கியூட் போர்டுகள், நட்டுகள், போல்ட்டுகள், மிக்சர் ஜார்கள், அலுமினியம் பாயில்கள், ரசாயன பொடிகள், மரத்துகள்கள், டைமர்கள், செல்போன் டிஸ்பிளேக்கள், வயர்கள், மல்டி மீட்டர்கள், ஏராளமான செல்போன்கள், சிம் கார்டுகள், பவர் பேங்க்குகள், ரீசார்ஜபுள் பேட்டரிகள், ஆதார் மற்றும் பான் கார்டுகள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் ஆகியவற்றை கைப்பற்றி உள்ளோம்.

ஜவுளி வியாபாரம் செய்து வந்த ஷாரிக்கிற்கு பணப்புழக்கம் எங்கிருந்து வந்தது, அவரது செலவுகளுக்கு பணம் கொடுத்து வந்தது யார்? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story