பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடைபெறுவது எப்போது?- முன்னாள் கவுன்சிலர்கள்-பொதுமக்கள் கருத்து


பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடைபெறுவது எப்போது?-  முன்னாள் கவுன்சிலர்கள்-பொதுமக்கள் கருத்து
x

பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடைபெறுவது எப்போது? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி முன்னாள் கவுன்சிலர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடைபெறுவது எப்போது? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி முன்னாள் கவுன்சிலர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குடிநீர் வினியோகம்

பெங்களூரு மாநகராட்சி சுற்றுப்புற எல்லைகள் கடந்த 2007-ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் நகரை சுற்றி இருந்த 7 நகரசபைகள், ஒரு பட்டண பஞ்சாயத்து மற்றும் 110 கிராமங்கள் மாநகராட்சியில் சேர்க்கப்பட்டன. இதனால் பெங்களூரு மாநகராட்சி பெருநகர மாநகராட்சியாக உருமாற்றம் பெற்றது. இதனால் மாநகராட்சியின் பரப்பு 226 சதுர கிலோ மீட்டரில் இருந்து 850 சதுர கிலோ மீட்டராக உள்ளது. பெங்களூரு மாநகராட்சி பெரிய அளவில் வளர்ந்து விட்டாலும் பொதுமக்களுக்கு தேவையான போதிய அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.

15 ஆண்டுகள் ஆகியும், புதிதாக சேர்க்கப்பட்ட 110 கிராமங்களில் இதுவரை முழுமையாக குடிநீர் வினியோகம் செய்து கொடுக்கப்படவில்லை. இன்னும் மழைநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை. பாதாள சாக்கடை வசதிகளும் இன்னும் முழுமையாக செய்யப்படவில்லை. அந்த மக்கள் கோடை காலங்களில் இன்னமும் டேங்கர் மூலம் தண்ணீர் பெற்று பயன்படுத்தும் அவல நிலை தான் உள்ளது. மழை காலத்தில் பெங்களூருவில் வெள்ளம் ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது வாடிக்கையாகிவிட்டது. இதுகுறித்து தேசிய, சர்வதேச அளவில் செய்திகள் வெளியாகி நகரின் பெருமையை பாதிக்க செய்கிறது.

மழைநீர் வடிகால்

இந்த வெள்ள பாதிப்புகள் மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் தான் ஏற்படுகின்றன. ஏனென்றால் அந்த பகுதிகளில் தரமான சாலை, கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் சரியாக இல்லை. கர்நாடகத்தில் ஆட்சி செய்த கட்சிகள், இந்த புதிய பகுதிகளை சரியான முறையில் கண்டுகொள்ளாததே இதற்கு காரணம் என்று பேச்சு நிலவுகிறது. தற்போது அந்த பகுதிகளில் மழைநீர் வடிகால், குடிநீர் குழாய்களை அமைத்தல், பாதாள சாக்கடை தடங்களை அமைத்தல் போன்ற பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ரூ.4,740 கோடி மதிப்பீட்டில் 5-வது கட்ட பெங்களூரு காவிரி குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் இந்த மாத இறுதியில் முடிக்கப்பட்டு 2023-ம் ஆண்டு முதல் 110 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்படி பணிகள் நிறைவு பெறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மிகவும் கஷ்டப்படுகிறார்கள்

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நிலவும், குடிநீர், சாலை, வடிகால் பிரச்சினைகள் குறித்து கவுன்சிலர்களிடம் முறையிட்டு அதற்கு தீர்வு காண்பார்கள். உள்ளூர் கவுன்சிலர்கள் உடனடியாக அந்த பிரச்சினையை தீர்க்க தங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்வார்கள். பெங்களூரு மாநகராட்சி கவுன்சில் (மக்கள் பிரதிநிதிகள்) பதவி காலம் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது.

மக்கள் பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிவடையும் முன்னரே மாநகராட்சி தேர்தல் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் அதன்படி தேர்தல் நடத்தப்படாததால், மாநகராட்சி நிர்வாகத்தை கவனிக்க நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார். கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், தங்களின் பிரச்சினைகளை யாரிடம் சொல்ல வேண்டும் என்று தெரியாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அதிகாரிகள் மக்கள் பிரச்சினைகள் குறித்து பெரிதாக கவலைப்படுவது இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் இல்லாததால், பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். கர்நாடக அரசு, பெங்களூரு மாநகராட்சி வார்டுகளை அதிகரிப்பதற்காக தனி சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி வார்டுகளின் எண்ணிக்கை 198-ல் இருந்து 243 ஆக அதிகரிக்கப்பட்டது.

இட ஒதுக்கீடு அறிவியல்

கர்நாடக ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு, மாநகராட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து மாநில அரசு 243 வார்டுகளுக்கான அரசாணை மற்றும் இட ஒதுக்கீட்டிற்கான அரசாணையை பிறப்பித்தது. இட ஒதுக்கீடு அறிவியலுக்கு மாறான முறையில் மேற்கொள்ளப்பட்டதாக கூறி கர்நாடக ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு, வார்டு இட ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்தும், மாநகராட்சிக்கு வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று கெடு விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

ஆனாலும் இந்த காலக்கட்டத்திற்குள் மாநகராட்சி தேர்தலை நடத்தும் மனநிலையில் அரசு இல்லை என்றே சொல்லப்படுகிறது. இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் சிலரிடம் கருத்துகளை கேட்டோம். அவர்கள் 'தினத்தந்தி'யுடன் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

தோற்றுவிடுவோம்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், பெங்களூரு புலிகேசிநகர் பிளாக் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ஸ்ரீதர், 'பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் பா.ஜனதா அரசு தேர்தலை நடத்த விரும்பவில்லை. பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்துள்ளதால் தோற்றுவிடுவோம் என்று பா.ஜனதாவினர் பயப்படுகிறார்கள். அதனால் இப்போதைக்கு மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெறுமா? என்று தெரியவில்லை. சட்டசபை தேர்தலுக்கு பிறகே மாநகராட்சி தேர்தலை நடத்துவார்கள் என்று நான் நினைக்கிறேன்' என்றார்.

பா.ஜனதா கட்சியை சேர்ந்தவரும், தர்மராயசாமி கோவில் வார்டு கவுன்சிலருமான தன்ராஜிடம் கேட்டபோது, 'பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கவுன்சிலர்கள் இருந்தால் தான் மக்கள் வந்து தங்களின் குறைகளை முறையிடுவார்கள். அதன் மூலம் மக்களின் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க முடியும். அதனால் பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்த வேண்டும்' என்றார்.

மழை பாதிப்புகள்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாருதிசேவநகர் வார்டு முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் கூறும்போது, 'பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடத்தப்படாததால் மக்களி்ன் பிரச்சினைகளை தீர்க்க ஆள் இல்லாத நிலை உள்ளது. சமீபத்தில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டது. அப்போது அதிகாரிகள் சரியான முறையில் மக்களுக்கு உதவிகளை வழங்கவில்லை. கவுன்சிலர்கள் இருந்திருந்தால் மக்களுக்கு விரைவாக உதவிகளை வழங்கி இருக்க முடியும். அதனால் மாநகராட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்' என்றார்.

பெங்களூரு ஜாலஹள்ளி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் கூறுகையில், 'பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடைபெறுவதை எம்.எல்.ஏ.க்கள் விரும்பவில்லை. அதனால் ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து தேர்தலை ஒத்திவைக்கிறார்கள். கர்நாடக சட்டசபை தேர்தல் வரை இவா்கள் மாநகராட்சி தேர்தல் நடத்த மாட்டார்கள். சட்டசபை தேர்தலுக்கு பின்னரே மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது' என்றார்.


Next Story