காங்கிரஸ் தலைவராக மீண்டும் பொறுப்பேற்பீர்களா? ராகுல் காந்தி பதில்!


காங்கிரஸ் தலைவராக மீண்டும் பொறுப்பேற்பீர்களா? ராகுல் காந்தி பதில்!
x

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நவம்பர் 17-ம் தேதி நடைபெறும்.

நாகர்கோவில்,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார். காஷ்மீர் வரை 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை மேற்கொள்கிறார்.

இந்நிலையில் இன்று காலையில் ராகுல்காந்தி, 3-வது நாள் பாதயாத்திரை தொடங்கினார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார்.

அப்போது தலைவர் பதவி வேண்டாம் என கூறிவிட்டு நாடு ஒற்றுமையாக இருக்க யாத்திரை செல்வது முரண்பாடாக இருப்பதாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-

கட்சியின் தேர்தல் வரும்போது தான், நான் தலைவர் ஆவேனா இல்லையா என்பது தெரிய வரும். அதே சமயம், நான் எந்த பொறுப்புக்கு வர வேண்டுமோ அது தொடர்பாக முடிவு எடுத்துவிட்டேன். அதில் எந்த குழப்பமும் இல்லை.

எனவே தேர்தல் வரும் வரை பொறுத்திருங்கள். இந்திய ஒற்றுமை நடைபயணம் என்பது காங்கிரஸ் கட்சியின் முடிவு. கட்சி உறுப்பினர் என்ற முறையில் யாத்திரை செல்கிறேன். காங்கிரஸ் கட்சியிலும் சரி, நடைபயணத்திலும் சரி எந்த முரண்பாடும் இல்லை.

யாத்திரையில் இருந்து என்னைப் பற்றியும் இந்த அழகான நாட்டைப் பற்றியும் சில புரிதல்களைப் பெறுவேன். இந்த இரண்டு மூன்று மாதங்களில் நான் புரிதல் அடைந்து விடுவேன். காங்கிரஸ் கட்சியின் 2-ம் கட்ட தலைவர்களுக்கு என்னை விட பாஜக அதிக அழுத்தம் தருவதாக உணர்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நவம்பர் 17-ம் தேதி நடைபெறும் என்றும், இரண்டு நாட்களுக்குப் பிறகு வாக்குகள் எண்ணப்படும். செப்டம்பர் 24 முதல் 30 வரை வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீண்டும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அவர் போட்டியிடலாம் என்பது ராகுல் காந்தியின் பேச்சின் மூலம் வெளிப்பட்டுள்ளது.


Next Story