மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி அளிக்க அதிகாரம் வழங்கியது யார்?-அரசுக்கு கர்நாடக ஐகோர்ட்டு கேள்வி


மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி அளிக்க அதிகாரம் வழங்கியது யார்?-அரசுக்கு கர்நாடக ஐகோர்ட்டு கேள்வி
x

பெங்களூருவில் மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி அளிக்க அதிகாரம் வழங்கியது யார்? என அரசுக்கு கர்நாடக ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில் மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி அளிக்க அதிகாரம் வழங்கியது யார்? என அரசுக்கு கர்நாடக ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

பொதுநல மனு தாக்கல்

பெங்களூருவில் சில மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதால் ஒலி மாசு ஏற்படுவதுடன், பொதுமக்களும் பாதிக்கப்படுவதாக கூறி கர்நாடக ஐகோர்ட்டில் ராகேஷ் உள்பட 32 பேர் சேர்ந்து பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று அந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் ஸ்ரீதர்பிரபு வாதாடும் போது, பெங்களூருவில் மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். இதன்மூலம் கோர்ட்டு உத்தரவுகள் மீறப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக சில மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்தினாலும், அதற்கு போலீசார் அபராதம் விதிப்பதில்லை என்றார்.

அதிகாரம் வழங்கியது யார்?

அப்போது மசூதிகள் தரப்பில் ஆஜரான வக்கீல், மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது, வக்பு போர்டும் அனுமதி வழங்கி இருக்கிறது என்றார். அந்த சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, ஒலிபெருக்கியை பயன்படுத்த அனுமதி வழங்குவது, நிராகரிப்பது அரசுக்கு சம்பந்தப்பட்டதாகும். அதேநேரத்தில் எந்த சட்டத்தின் அடிப்படையில் மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி அளிக்க அதிகாரம் வழங்கியது யார்?. எத்தனை நாட்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படுகிறது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கும்படி தலைமை நீதிபதி தெரிவித்தார். இதுபற்றி விளக்கம் அளிக்க காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் அரசு வக்கீல் கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, இந்த வழக்கின் விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.


Next Story