நிலையற்ற அரசு குற்றச்சாட்டு: எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி அரசுகளை கவிழ்ப்பது யார்? பா.ஜனதாவுக்கு பிரியங்கா கேள்வி


நிலையற்ற அரசு குற்றச்சாட்டு: எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி அரசுகளை கவிழ்ப்பது யார்? பா.ஜனதாவுக்கு பிரியங்கா கேள்வி
x
தினத்தந்தி 10 Nov 2022 8:45 PM GMT (Updated: 10 Nov 2022 8:45 PM GMT)

காங்கிரஸ் கட்சியால் நிலையான அரசை அமைக்க முடியாது என குற்றம் சாட்டி வரும் பா.ஜனதாவுக்கு அவர் பதிலடி கொடுத்தார்.

சிர்மார்

இமாசல பிரதேசத்தில் நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதில் பா.ஜனதா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியால் நிலையான அரசை அமைக்க முடியாது என குற்றம் சாட்டி வரும் பா.ஜனதாவுக்கு அவர் பதிலடி கொடுத்தார்.

சிர்மாரில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசும்போது, 'நாடு விடுதலை அடைந்தது முதல் நிலையான அரசை காங்கிரஸ் கட்சி கொடுத்து வருகிறது. ஆனால் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி, அரசுகளை கவிழ்ப்பது யார்? நிலையற்ற தன்மையை உருவாக்குவது யார்?' என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால், பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை கேள்வி எழுப்பும் பா.ஜனதாவை பிரியங்கா குறை கூறினார்.

பெரும் தொழிலதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்யும் பா.ஜனதா, பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான நிதி ஆதாரம் குறித்து கேள்வி எழுப்புவதாக குற்றம் சாட்டினார்.


Next Story