சிறிய மாவட்டமான குடகை கைப்பற்ற போவது யார்?
சிறிய மாவட்டமான குடகை கைப்பற்ற போவது யார்? என மும்முனை போட்டி நிலவி வருகிறது.
பெங்களூரு-
கர்நாடக மாநிலத்தில் 2 சட்டசபை தொகுதிகளை மட்டுமே கொண்ட மிகச் சிறிய மாவட்டம் குடகு தான். கொடவா, கவுடா, முஸ்லிம், ஆதிவாசி மக்கள் அதிகம் வசிக்கும் இந்த மாவட்டத்தில் கடந்த 4 தேர்தல்களில் பா.ஜனதா கட்சி தான் வெற்றி கொடியை நாட்டி உள்ளது. ஆனால் இந்த முறை பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவ வாய்ப்பு உள்ளது.
ஜனதா தளம்(எஸ்) கட்சி வெற்றி பெற்றதில்லை
குடகு மாவட்டத்தில் முன்பு மடிகேரி, விராஜ்பேட்டை, சோமவார்பேட்டை என 3 சட்டசபை தொகுதிகள் இருந்தன. ஆனால், மாவட்டத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை மிக குறைவாக இருந்ததால், தேர்தல் ஆணையம் சோமவார்பேட்டை தொகுதியை கலைத்து, அங்குள்ள பகுதிகளை மடிகேரி மற்றும் விராஜ்பேட்டை தொகுதிகளில் இணைத்தது. மலை மாவட்டமான குடகில் இதுவரை நடந்த தேர்தல்களில் பா.ஜனதாவும், காங்கிரஸ் கட்சியும் தான் வெற்றி பெற்று வந்து உள்ளன. இங்கு ஜனதா தளம் (எஸ்) வெற்றி பெற்றதில்லை. ஆனால் இந்த தேர்தலில் ஜனதா தளம்(எஸ்), தேசிய கட்சிகளுக்கு இணையாக மல்லுக்கு நிற்கிறது.
கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெற்றாலும், அந்த கட்சி மாவட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாலும், திப்பு ஜெயந்தி விழாவின் போது நடந்த வன்முறையாலும் பா.ஜனதா மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். இதனை காங்கிரஸ் கட்சி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வெற்றி பெற திட்டமிட்டு வருகிறது.
மடிகேரி
மடிகேரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அப்பச்சு ரஞ்சன். இந்த முறையும் பா.ஜனதா சார்பில் அவர் தான் மடிகேரி தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. ஆனால், உள்ளூர் தலைவர்கள் சிலர், பா.ஜனதா சார்பில் போட்டியிட டிக்கெட் கேட்டு மேலிட தலைவர்களை வலியுறுத்தி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி சார்பில் மந்தர்கவுடா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் அரக்கல்கோடு ெதாகுதியில் டிக்கெட் கேட்டு வரும் முன்னாள் மந்திரி ஏ.மஞ்சுவின் மகன் ஆவார்.
ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
விராஜ்பேட்டை
விராஜ்பேட்டை தொகுதியில் பா.ஜனதாவில் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள முன்னாள் சபாநாயகர் கே.ஜி.போப்பையா மீண்டும் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. ஆனாலும், மாவட்ட பா.ஜனதாவில் அவருக்கு எதிராக சிலர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் கட்சியில் உள்ள அதிருப்திகளை சமாளிக்க மேலிடம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
காங்கிரஸ் கட்சி சார்பில் ஏ.எஸ்.பொன்னண்ணாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் சங்கீத் பூவய்யா வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் சிலர் ஜனதாதளம்(எஸ்) சார்பில் டிக்கெட் கேட்டு வருகிறார்கள்.