சித்தராமையா-டி.கே.சிவக்குமார் இடையே பனிப்போர்- காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி யார்?


சித்தராமையா-டி.கே.சிவக்குமார் இடையே பனிப்போர்-  காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி யார்?
x

சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே பனிப்போர் ஏற்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெங்களூரு: சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே பனிப்போர் ஏற்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்)

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ளன. டிசம்பர் மாதம் முடிடைந்துவிட்டால், ஜனவரியில் இருந்து தேர்தல் ஜுரம் வந்துவிடும். முதல்-மந்திரி, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் என மக்கள் பிரதிநிதிகள் அனவைரும் அவரவர் தொகுதிகளில் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு விடுவார்கள். கட்சிகளின் தேசிய தலைவர்கள் வருகை தருவது, பிரசாரங்களில் ஈடுபடுவது, கட்சி நிர்வாகிகள் கூட்டங்களை நடத்துவது, வேட்பாளர்களை அறிவிப்பது என்று தேர்தல் பணிகள் சுறுசுறுப்பாகிவிடும்.

கர்நாடகத்தில் தற்போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இந்த 5 ஆண்டுகால ஆட்சியில் 3 முதல்-மந்திரிகளை கர்நாடகம் பார்த்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காததால் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றின. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

ஆட்சி கவிழ்ந்தது

இந்த கூட்டணி ஆட்சி 14 மாதங்கள் நீடித்த நிலையில் அக்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி பா.ஜனதாவுக்கு தாவியதால், கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டு எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பா 2 ஆண்டுகள் நீடித்த நிலையில் வயது மூப்பு காரணமாக அவர் 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் கழற்றிவிடப்பட்டார்.

அதைத்தொடர்ந்து திடீர் திருப்பமாக போலீஸ் துறை மந்திரியாக இருந்த பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார். எடியூரப்பா பதவியை விட்டுக்கொடுத்த அடுத்த சில நாட்களில் பசவராஜ் பொம்மை முதல்-மந்திரி பதவியில் அமர்ந்தார். அவர் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற ஓராண்டு நிறைவடைந்து 2-வது ஆண்டில் 4 மாதங்களை நிறைவு செய்துள்ளார்.

பல்வேறு ஊழல்கள்

பசவராஜ் பொம்மை தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் என ஒவ்வொன்றாக பகிரங்கமாகி வந்துள்ளதால் பா.ஜனதா அரசுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பிட்காயின் முறைகேடு, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடு, கல்லூரி ஆசிரியர் நியமன தேர்வு முறைகேடு, அரசு திட்ட ஒப்பந்ததாரர்களின் 40 சதவீத கமிஷன் முறைகேடு என பல்வேறு ஊழல் புகார்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. தற்போது புதியதாக வாக்காளர் பட்டியல் முறைகேடு புகாரை அரசுக்கு எதிராக காங்கிரஸ் கூறியுள்ளது.

40 சதவீத கமிஷன் புகாரில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் என்பவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து குற்றச்சாட்டுக்கு ஆளான ஈசுவரப்பா மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இது ஆளும் பா.ஜனதாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அதற்கு முன்பு பாலியல் புகாரில் ரமேஷ் ஜார்கிகோளி மந்திரி பதவியை இழந்தார். இந்த சம்பவங்கள் பா.ஜனதா அரசின் நற்பெயருக்கு சற்று களங்கத்தை ஏற்படுத்தியது.

மீண்டும் ஆட்சியை பிடிக்கும்

மற்றொருபுறம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். சமீபத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு, தொழில்நுட்ப மாநாடு போன்றவற்றை வெற்றிகரமாக அரசு நடத்தி முடித்துள்ளது. இது அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். ஆனாலும் ஆளும் பா.ஜனதா அரசுக்கு எதிரான ஊழல் புகார்கள் மக்களிடையே அரசுக்கு எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது. இதனால் கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இதனால் காங்கிரசார் உற்சாகமாக உள்ளனர். ஒருவேளை சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் யார் முதல்-மந்திரி என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

மக்கள் செல்வாக்கு

சித்தராமையா மக்கள் செல்வாக்கு படைத்த தலைவர். டி.கே.சிவக்குமாா் பா.ஜனதாவின் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு காங்கிரஸ் கட்சியை மிக தீவிரமாக பலப்படுத்தி வருகிறார். அதனால் காங்கிரஸ் மேலிடத்திற்கு இரு தலைவர்களும் மிக முக்கியமானவர்களாக உள்ளனர். இருவரும் இணைந்து பணியாற்றினால் மட்டுமே காங்கிரஸ் வெற்றி கனியை பறிக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதில் ஒருவர் சுணக்கம் காட்டினாலும் நிலைமை மோசமாகிவிடும்.

சித்தராமையா குருப சமூகத்தை சோ்ந்தவர் என்பதை தாண்டி அவர் பிற்படுத்தப்பட்ட, தலித், பழங்குடியின மக்களின் பொதுவான தலைவராக பார்க்கப்படுகிறார். இது

அவருக்கு கூடுதல் பலமாக உள்ளது. டி.கே.சிவக்குமார், மைசூரு மண்டலத்தில் பெரும்பான்மையாக உள்ள ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்தவர். இதுதவிர கட்சியை வலுப்படுத்துவதில் வல்லவராக திகழ்கிறார். இந்த அம்சம் அவருக்கு கூடுதல் பலமாக பாார்க்கப்படுகிறது. சித்தராமையா பா.ஜனதாவுக்கு சவாலாக திகழ்கிறார்.

காங்கிரஸ் மேலிடத்தின் சூத்திரம்

இந்த சூழ்நிலையில் முதல்-மந்திரி பதவிக்கான பிரச்சினையை தீர்க்க காங்கிரஸ் மேலிடம் முயற்சி செய்து வருகிறது. சித்தராமையாவின் ஆதரவாளர்கள், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவை நேரில் சந்தித்து, சட்டசபை தேர்தலில் சித்தராமையா முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கோரியதாக கூறப்படுகிறது. அவ்வாறு சித்தராமையாவை அறிவித்தால் அது கட்சிக்கு கூடுதல் பலத்தை பெற்று கொடுக்கும் என்பது அவர்களின் வாதமாக உள்ளது. அதற்கு டி.கே.சிவக்குமார் கடும் ஆட்சேபனை தெரிவித்தள்ளார். தேர்தலுக்கு முன்பு முதல்-மந்திரி வேட்பாளரை அறிவித்தால், அது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறியதாக தெரிகிறது.

இருவரையும் திருப்திப்படுத்தும் நோக்கத்தில் காங்கிரஸ் மேலிடம் ஒரு சூத்திரத்தை (பார்முலா) முன்வைத்துள்ளது. அதாவது முதல்-மந்திரி பதவி ஆளுக்கு 2½ ஆண்டுகள் பகிர்ந்து வழங்குவது தான் அந்த சூத்திரம். இதை சித்தராமையாவின் ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்வதாக தெரிகிறது. இதற்கு டி.கே.சிவக்குமாரோ, காங்கிரஸ் வெற்றி பெற்றால் எம்.எல்.ஏ.க்களின் கருத்துப்படி முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கலாம் என்று ஆலோசனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் இந்த ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் சூத்திரம் எடுபடும் என்று பரவலாக பேசப்படுகிறது. அடுத்தடுத்து வரும் நாட்களில் இந்த விஷயத்தில் ஒரு தெளிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவே கடைசி தேர்தல்...!

சித்தராமையா கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலின்போது, இதுவே எனது கடைசி தேர்தல் என்று கூறினார். அதன்பிறகு தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். தனது 5 ஆண்டு கால ஆட்சியில் நல்ல திட்டங்கள் பலவற்றை அறிவித்து செயல்படுத்தியதால் மக்கள் மீண்டும் ஆதரவு அளிப்பார்கள், 2-வது முறையாக முதல்-மந்திரியாக ஆகிவிடலாம் என்று சித்தராமையா கனவு கண்டார். ஆனால் தேர்தல் முடிவு அவர் நினைத்தப்படி வரவில்லை. இதனால் அவர் கடும் ஏமாற்றம் அடைந்தார். ஆதரவாளர்கள் வற்புறுத்தியதால், தனது முடிவை மாற்றிக்கொண்ட சித்தராமையா 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என்று அறிவித்தார். அவர் கோலார் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சித்தராமையா, இதுவே எனது கடைசி தேர்தல் என்று அறிவித்தார்.


Next Story