"நாளைக்குள் கர்நாடக முதல்-மந்திரி யார்? என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்" - ரந்தீப் சுர்ஜீவாலா பேட்டி
"நாளைக்குள் கர்நாடக முதல்-மந்திரி யார்? என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று ரந்தீப் சுர்ஜீவாலா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. முதல் மந்திரி பதவியை கைப்பற்றுவதில் சித்தராமையாவிற்கும் டிகே சிவக்குமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் இன்று தனித்தனியே ராகுல் காந்தியை சித்தராமையாவும் டிகே சிவக்குமாரும் சந்தித்து பேசினர்.
சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரில் யார் முதல்-மந்திரியாக தேர்வு பெறுவது என்ற விவகாரம் கர்நாடகா மாநில காங்கிரசை இரண்டு கோஷ்டிகளாக பிளவுபடுத்தி இருக்கிறது. முதல் மந்திரி விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நாளைக்குள் கர்நாடக முதல்-மந்திரி யார்? என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "கர்நாடக முதல்-மந்திரி தேர்வு தொடர்பாக பரப்பப்படும் வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இன்று மாலை அல்லது நாளைக்குள் புதிய முதல்-மந்திரி யார்? என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிடுவார். மாநிலத்தில் அடுத்த 3 நாட்களுக்குள் புதிய அமைச்சரவை உருவாக்கப்படும். கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி அளித்துள்ள முக்கியமான 5 வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்" என்று கூறினார்.